யாழில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அடுத்தடுத்து மிரட்டல்
எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மிரட்டல் விடுத்த மற்றுமொரு சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
கைதடியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
அடுத்தடுத்து மிரட்டல்
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற திருத்த வேலை காரணமாக பெட்ரோல் வழங்க மறுத்ததால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
“நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது போன்றதொரு சம்பவம் உங்களுக்கும் நடக்கும் என அவர்கள் மிரட்டல் விடுத்ததாக” எரிபொருள் நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.
முறைப்பாடு
சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில், நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர் இல்லாது பெட்ரோல் வழங்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடமையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வாட்டுத் தாக்குதலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
