ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிவேக இரட்டைச் சதமடித்த கிஷன் - பங்காளதேஸிற்கு இமாலய இலக்கு
ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிவேக இரட்டைசதமடித்த வீரர் என்ற பெருமையை இஷான் கிஷான் பெற்றுள்ளார்
இந்திய துடுப்பாட்ட அணி பங்காளதேஸிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் பங்களாதேஸ் அணி அபார வெற்றி பெற்று தொடரை தன்வசப்படுத்தியது.
கோலி கிஷன் சதம்
இந்த நிலையில் இந்தியா-பங்காளதேஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் துடுப்பாட்ட போட்டி சட்டோகிராமில் இன்று இடம்பெற்று வருகின்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்காளதேஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வேகமாக ஓட்டங்களை குவித்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்துக் கொடுத்தார். 3ம் வரிசையில் இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆறு ஓட்ட மழை
அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் ஒருநாள் துடுப்பாட்ட போட்டியில் முதல் சதம் கடந்தார். விராட் கோலி மறுமுனையில் சதம் கடந்தார். இஷான் கிஷன் சதத்திற்கு பின்னர் அபாரமாக விளையாடி “ஆறு ஓட்ட மழை” பொழிந்தார் . அதனால் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்துவருகிறது.
தொடர்ந்து இஷான் கிஷன் அதிரடியாக 126 பந்துகளில் இரட்டைசதமடித்து அசத்தினார். இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் சச்சின் , சேவாக் ,ரோகித் சர்மாவுக்கு பிறகு இரட்டைசதமடித்து இஷான் கிஷன் குறித்த சாதனையை படைத்துள்ளார்.
தொடர்ந்து ஆடிய அவர் 24, நான்கு ஓட்டங்களும் , 10 ஆறு ஓட்டங்களுமாக 131 பந்துகளில் 210 ஒட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.
