இலங்கை வந்த சுற்றுலாப்பயணிக்கு நடந்த அவலம்!
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா வந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (16.05.2023) இடம்பெற்றுள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தமிழ்நாடு- திருநெல்வேலி 76/A சர்க்கரை விநாயகர் வீதியில் வசித்து வரும் 26 வயதுடைய கஸ்தூரி ரங்கன் ஜெயசூர்ய எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழப்புக்கு காரணம்
திருகோணமலை- அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நண்பர்களுடன் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த நபர், நேற்றைய தினம் (16) நீரில் மூழ்கிய நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்றைய தினம் (17) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த இளைஞரின் உறவினர்கள் திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில் சடலத்தை இந்தியா கொண்டு செல்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த மரணம் தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
