எவ்வளவு நிதியைப் பெற்றாலும் இலங்கைக்கு கடினமான பாதை உள்ளது - எச்சரித்த பொருளாதார நிபுணர்
சர்வதேச நாணய நிதியம் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றாலும், இலங்கைக்கு கடினமான பாதை உள்ளதென Moody's Analytics இன் மூத்த பொருளாதார நிபுணர் கத்ரீனா எல் தெரிவித்துள்ளார்.
உலக செய்தி சேவையிடம் கருத்து தெரிவிக்கும்போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் திங்கட்கிழமை இலங்கைக்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் கடன் வசதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வெள்ளிக் குண்டாக இருக்காது
மேலும், இந்த திட்டமானது 7 பில்லியன் டொலர்களை ஒட்டுமொத்த நிதியுதவியாக அணுக உதவும் என்று அதிபர் செயலகம் தெரிவித்தது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கத்ரீனா எல்,
சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பானது வெளித்தோற்றத்தில் மாயாஜாலம் காட்டும் வெள்ளிக் குண்டாக இருக்காது.
அரசாங்கத்திடமிருந்தும் இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புகளிலும் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காணாத வரையில் நிதிச் சந்தைகளில் வெளிப்படும் உற்சாகம் உண்மையில் மங்கியிருக்கும்.
கடினமான பாதை
எதிர்வரும் மாதங்களில் நாடு பெறும் அனைத்து மேலதிக நிதிகளும் நல்ல செய்திகளே. ஆனால் நிதி விவேகம் மற்றும் கடன் நிலைத்தன்மை ஆகியவை முக்கியமாக இருக்கும்.
இலங்கை மீது எவ்வளவு சாத்தியமான நிதி அல்லது ஆதரவு வீசப்பட்டாலும் அது இன்னும் கடினமான பாதையாகவே இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
