கட்டுநாயக்கவிலிருந்து வெளியேறிய இருவர் அதிரடியாக கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்லப்பட்ட 323 கையடக்கத் தொலைபேசிகள்,அவற்றை கொண்டு சென்ற இரண்டு பேர் மற்றும் அவற்றை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டன.
01/03 இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வரிசெலுத்தாமல் கொண்டு சென்ற கைத்தொலைபேசிகள்
246 பயன்படுத்தப்படாத கையடக்கத் தொலைபேசிகளும், வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்ட 77 கையடக்கத் தொலைபேசிகளும் இந்தக் கைத்தொலைபேசிகளில் உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
கொழும்பைச் சேர்ந்த இருவர்
கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரும், வத்தளை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு இந்தக் கைத்தொலைபேசிகளை எடுத்துச் செல்லும் போது, காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று வானை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியுள்ளது.
கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசிகள், அவற்றை சட்டவிரோதமாக எடுத்துச் சென்ற இருவர் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட வான் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட தலைமையக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |