பெண் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!
இளைஞர் ஒருவரை கடத்திச்சென்று தாக்கி காயப்படுத்திய இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்கேநபர்கள், மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாகொல ஞான மௌலி மாவத்தையை சேர்ந்த 55 வயதான பெண் ஒருவருக்கு ஹங்குரன்கெத்த பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் சமூக வலைத்தளத்தில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
போலியான கணக்கு
இது குறித்து உறவினர்களிடம் அப்பெண் தெரியப்படுத்தியதையடுத்து, அவரின் மருமகன் மற்றுமொரு யுவதியின் போலியான நிழற்படத்தை பயன்படுத்தி, கணக்கை உருவாக்கி குறித்த இளைஞருடன் குறுஞ்செய்திகளை பரிமாறி கொழும்பிற்கு அழைத்து வந்துள்ளார்.
அந்த இளைஞர் கடந்த 19 ஆம் திகதி கொழும்பு – புறக்கோட்டைக்கு வருகை தந்த போது, அப்பெண் அவரது மகள், மருமகன் மற்றுமொரு நபருடன் இணைந்து இளைஞரை மகிழுந்தில் கடத்தி, சப்புகஸ்கந்தைக்கு அழைத்துச்சென்று தாக்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சப்புகஸ்கந்த – பமுனுவில மயானத்திற்கு அருகில் அவர்கள் இளைஞரைத் தாக்கி வீதியில் விட்டுச்சென்றிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அவசரப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அங்கு சென்ற காவல்துறையினர் குறித்த இளைஞரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
