ரஷ்ய கிளர்ச்சியாளர்களின் பகுதி மீது உக்ரைன் ஏவுகணைத் தாக்குதல்
உக்ரைன் இராணுவம் டொனேட்ஸ்க் பகுதியில் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு உக்ரைனில் உள்ள டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு பகுதி ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ரஷ்யா “டொனேட்ஸ்க் பகுதியில் உக்ரைன் இராணுவம் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 28 பேர் காயமடைந்திருக்கிறார்கள், இந்த ஏவுகணைத் தாக்குதல் குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்பட்டிருக்கிறது, இது போர்க் குற்றமாகும்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யத் தொலைக்காட்சியொன்று “பொதுமக்கள் பலர் ஏ.ரி.எம். மற்றும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதில் குழந்தைகள் உள்பட 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
அத்துடன் ரஷ்ய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் இகோர் கோனசென்கோ “ஆயுதப்படைத் தாக்குதல் இல்லாத பகுதிகளில் இதுபோன்ற ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பது போர்க் குற்றம்” எனத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
