ரஷ்ய படைகளிடம் இழந்த பகுதிகளை மீட்க தீவிர மோதலில் குதித்தது உக்ரைன் படை
ரஷ்ய படைகளிடம் இழந்த பகுதிகளை மீட்க உக்ரைன் படைகள் தீவிர சண்டையில் ஈடுபட்டுவருவதாக அமெரிக்கா, ஜேர்மன் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் குண்டுவீச்சு தாக்குதல்களை தொடர்ந்துவரும் போதிலும், ரஷ்யப்படைகள் அந்நாட்டில் முன்னேறுவதில் தோல்வியடைந்துள்ளதாக, ஜேர்மன் அரச தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் தெரிவித்துள்ளார்.
“உக்ரைனில் ரஷ்யப்படைகள் தினந்தோறும் அழிவுகளை மேற்கொண்டுவந்தாலும், புடினின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது,” என அவர் ஜேர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் “உண்மையை கேட்க வேண்டும்” என தெரிவித்த அவர், சண்டையை நிறுத்தி, ராஜரீக தீர்வை கண்டறிய முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.
உக்ரைன் – ரஷ்யா இருநாடுகளுக்கு இடையிலான போர் உக்ரைனை மட்டும் அழிப்பதில்லை எனவும், “ரஷ்யாவின் எதிர்காலத்தையும் அழிப்பதாக” அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு மேலும் பல தடைகள் குறித்து எச்சரிக்கைவிடுத்த அவர், “ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தொடர்ந்து தீவிரமாக்கி வருகிறோம். ஆனால், அந்த தடைகள் ரஷ்ய தலைமையைவிட ஐரோப்பிய நாடுகளை பாதிக்கக்கூடாது” என தெரிவித்தார். மேலும், உக்ரைனியர்கள் “ஜேர்மனியை நம்பலாம்” எனவும், அந்நாட்டிலிருந்து “அகதிகளை வரவேற்பதாகவும்” அவர் கூறினார்.
இந்நிலையில், நேட்டோ முன்னாள் துணை தலைமை தளபதி ஆட்ரியன் பிராட்ஷா, பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் கூறுகையில், “நம்ப முடியாத அளவுக்கு உக்ரைனியர்கள் தொடர்ந்து தைரியத்துடன் போரிட்டு வருகின்றனர். பல பகுதிகளில் ரஷ்ய படையினரை தடுத்துவருகின்றனர்” என தெரிவித்தார்.
இதே கருத்தைக் கூறியுள்ள அமெரிக்காவும், இழந்த பகுதிகளை ரஷ்ய படையிடமிருந்து மீட்க உக்ரைன் படைகள் தீவிர சண்டையிட்டுவருவதாக தெரிவித்துள்ளது.
