சர்வதேசத்தை ஏமாற்றும் சிறிலங்கா!! ஐ.நாவின் நிலை இதுதான் - நேரடி ரிப்போர்ட்
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் நேரத்தில், தமிழர் தரப்பு தனது நியாயப்பாட்டை முன்வைப்பதற்கு வழங்கப்படும் நேரம் போதாது என முன்னாள் வடமாகாண அமைச்சரும் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவருமான அனந்தி சசிதரன் விசனம் வெளியிட்டுள்ளார்.
இன்று ஜெனிவாவில் இருந்து காணொளி வாயிலாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மனித உரிமைப் பேரவை அதிகாரிகள் சொற்ப எண்ணிக்கையானவர்களுக்கே கருத்து தெரிவிக்க நேரத்தை வழங்குவதால், இலங்கையில் இருந்து வந்துள்ள தன்னைப்போன்ற அரசியல் பிரதிநிதிகளுக்கு ஏமாற்றம் ஏற்படுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
குரல்வளையினை நசுக்கும் செயற்பாடு

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ கடந்த காலத்தில் கொரோனா பிரச்சினை காரணமாக எங்களால் இங்கே வர முடியவில்லை. இம்முறை பெரும் செலவுக்கு மத்தியில் நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம்.
நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடுகளை தெரிவிக்க நாங்கள் இங்கே வந்திருக்கின்ற நிலையில், ஐ.நாவில் 10 அரச சார்பற்ற நிறுவனங்களைத் தான் பேசுவதற்காக அழைக்கிறார்கள்.
இதனை நாங்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் குரல்வளையினை நசுக்கும் செயற்பாடாகத் தான் பார்க்கின்றோம். ஏனென்றால் நாடுகளை காப்பாற்றுகின்ற செயற்பாட்டினைத் தான் ஐ.நா அப்பட்டமாக செய்வதாக நாங்கள் பார்க்கின்றோம்.
ஐ.நாவின் நிலை இதுதான்
ஏனென்றால் நாங்கள் பேச வந்த பொழுது பத்துக்கு பின் தான் எங்களுக்கு இலக்கம் வந்திருந்தது. ஆனால் 10 வீதமானவர்களுக்கு மாத்திரமே பேசுவதற்கு அனுமதி என்று சொல்லி அவர்கள் 10 அரச சார்பற்ற நிறுவனங்களைத் தான் உரையாற்றுவதற்காக அனுமதி வழங்கி இருந்தார்கள்.
சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றும் நிலைப்பாட்டினை எடுத்துக் கூறுவதற்காக நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம். ஆனால் இது தொடர்பான கருத்தை முன்வைப்பதற்கு உரிய களம் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எங்களுக்கு வழங்கப்பட்ட 1.30 நிமிடங்களுக்குள் இனவழிப்பு தொடர்பான விடயங்களை பேசுவது என்பது சாத்தியமற்ற ஒன்று. ஐ.நாவின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது” என்றார்.