ராஜபக்சர்களை புறக்கணித்து ரணிலுடன் கூட்டு சேரும் முக்கியஸ்தர்கள்..! வெளியான தகவல்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த சில முக்கியஸ்தர்களை ஐக்கிய தேசியக்கட்சியில் இணைத்துக் கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர், அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் சிலரை அண்மையில் சந்தித்து விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர்
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பொறுப்புக்களை வகிக்கும் கொழும்பு, கம்பஹா, கண்டி, காலி, மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களை இந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மேல் மாகாணத்தை சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வருபவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே விளையாட்டுத்துறை அமைச்சரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க, ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
