ஒரு ஹெக்டேயருக்கு 100 கிலோகிராம் - பகிரப்படவுள்ள யூரியா உரம்
சகல விவசாயிகளுக்கும் யூரியா உரம்
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள யூரியா உரத்தை ஒரு ஹெக்டேயருக்கு 100 கிலோகிராம் வீதம் வழங்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
துறைசார் அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போது விவசாய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த உரத்தை சிறுபோக செய்கையில் ஈடுபடும் சகல விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் விவசாய அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பழங்களின் ஏற்றுமதிக்கும் பாதிப்பு
இதேவேளை, தற்போதைய எரிபொருள் மற்றும் உர நெருக்கடி காரணமாக பழங்களின் ஏற்றுமதிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நாட்டின் மரக்கறி மற்றும் பழங்கள் சர்வதேச சந்தையை இழக்கும் அபாயம் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் மரக்கறிகள் மற்றும் பழங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் அதிக கேள்வி நிலவுகின்ற நிலையில், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிகள் ஊடாக 80 முதல் 90 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக கிடைக்கப்பெறுவதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.