வெடுக்குநாறி மலை விவகாரம் : மோசமடைந்துள்ள சிறையில் உள்ளோரின் உடல் நிலை!
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரின் உறவினர்கள் இன்றைய தினம் (15) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த உறவுகள் இன்றைய தினம் சிறைச்சாலைக்கு சென்று அவர்களது உறவினர்களை சந்தித்திருந்தனர்.
இதன்போது, ஐவர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வதால் அவர்களது உடல் நிலை மோசமடைந்து செல்வதாக தெரிவித்தனர்.
மனித உரிமைகள் அலுவலகம்
இதனையடுத்து, பிராந்திய மனித உரிமைகள் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு நிறைவேற்று அதிகாரிகள் எவரும் இருக்கவில்லை.
கடமையில் இருந்த அலுவலர்களும் மக்களுடன் கலந்துரையாடாமல் அலுவலகத்தின் உள்ளே இருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் ஆணைக்குழு அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலர்களின் உறுதி
இதனையடுத்து, ஒரு மணி நேரத்தின் பின்னர் அலுவலர்கள் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன், நாளைய தினம் (16) சிறைச்சாலைக்கு சென்று தடுப்பில் உள்ளவர்களை நேரடியாக பார்வையிடுவதாக உறுதி அளித்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆணையாளர் தூங்குகிறாரா? இந்த அலுவலகம் சிங்களவருக்கு மட்டுமா? ஏன் பக்கச்சார்பாக செயற்படுகிறாய்? மனித உரிமை ஆணைக்குழுவே பதில் சொல் போன்ற கோசங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |