இந்தியாவை விட்டு வெளியேறும் வட்ஸ்அப் நிறுவனம்! வெளியானது காரணம்
மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் இந்தியாவிலிருந்து வெளியேற நேரிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரித்துள்ளது.
வாட்ஸ்அப்-ன் அம்சமான எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ (end-to-end encryption) உடைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்படுமென டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய சட்டம்
கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் பயனாளர்களின் உரைகளை கவனித்து அவர்களை அடையாளம் காண வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துவதாக மெட்டா நிறுவனம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் தேஜஸ் கரியா, வாட்ஸ்அப்பின் பிரைவசியை (Privacy) கருத்தில் கொண்டு இந்தியாவில் 400 மில்லியன் மக்கள் இதனை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்
இது குறித்து நீதிமன்றில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் என்பது வாட்ஸ்அப்பில் செய்திகளை (Messages) அனுப்பியவரும், அதை பெறுபவரும் மட்டுமே தாங்கள் அனுப்பிய செய்திகளை பார்க்க முடியும்.
இந்த அம்சத்தால் மட்டுமே மக்கள் அச்சமின்றி இதனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, 19 மற்றும் 21, ஆகியவற்றை மீறும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறான சட்டங்கள் வேறு மற்ற எந்த நாடுகளிலும் இல்லை. பிரேசிலில் கூட இல்லை. எந்த செய்திகளையும் டிகிரிப்ட் (Decrypt4) செய்யச் சொல்லி கேட்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியாது.
எனவே, எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ உடைக்க மத்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என தெரிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட வழக்கு
இதையடுத்து, சட்டத்திற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், இன்றைய காலகட்டத்துக்கு இத்தகைய செயல்முறையும் சட்டமும் அவசியம் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |