தென்னையை அச்சுறுத்தும் வெள்ளை ஈ - கிடைத்தது தீர்வு
நாடளாவிய ரீதியில் தென்னை பயிர்ச்செய்கைக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள வெள்ளை ஈயினால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு உயிரியல் தீர்வாக விவசாய திணைக்களம் என்கார்சியா குவாடலூபே (Encarsia guadeloupae) என்ற ஒட்டுண்ணியை அறிமுகப்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தென்னை பயிர்ச்செய்கைக்கும் அதன் பின்னர் பழங்கள் மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கைக்கும் வெள்ளை ஈ யால் ஏற்பட்ட சேதம் பாரதூரமானது என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்னையை அச்சுறுத்தும் வெள்ளை ஈ
இதன்படி, இயற்கையாக வளரும் ஒட்டுண்ணியான Encarsia guadeloupae தென்னை அபிவிருத்திச் சபை மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தால் இன்று விவசாய அமைச்சில் வெள்ளைப் பூச்சியினால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஒட்டுண்ணியை, விவசாயத் திணைக்களத்தின் பூச்சியியல் நிபுணர் பிரபாத் நிஷாந்த அடையாளம் கண்டுள்ளார்.
விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு
இந்த ஒட்டுண்ணியை விவசாயத் திணைக்களத்தின் ஆய்வகங்களில் பெருக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரபாத் நிஷாந்த தெரிவித்தார்.
இந்த ஒட்டுண்ணி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் காரணமாக தென்னந்தோப்புகளில் வெள்ளை ஈக்களின் எண்ணிக்கை 95 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
