மருத்துவ உலகில் அதிர்ச்சி -பெண்ணின் மூளையில் வாழ்ந்து வந்த உயிருள்ள புழு மீட்பு
அவுஸ்திரேலியாவில் 64 வயது பெண் ஒருவரின் மூளைக்குள் உயிருடன் புழு ஒன்று வாழ்ந்து வந்த சம்பவம் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயது பெண்மணி நிமோனியா எனப்படும் மார்புச்சளி, வயிற்று வலி, வயிற்று போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல், இரவு வியர்வை, மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாடு ஆகியவற்றுக்கு நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்தார்.
மூளையில் தென்பட்ட புதிய பொருள்
ஆனால் அவருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இதனால், அவரின் தலையை எம்.ஆர்.ஐ ஸ்கான் செய்து பார்த்துள்ளனர். ஸ்கான் பரிசோதனை முடிவைப் பார்த்த மருத்துவர்கள் பெண்மணியின் மூளையில் ஏதோ ஒரு புதிய பொருள் தென்பட்டதை கண்டறிந்தனர். அதனை அகற்ற ஒரு அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால், அதனை நரம்பியல் நிபுணர் அடங்கிய ஒரு சிறப்பு அறுவை சிகிச்சை குழு செய்தது.
அப்போது அவர் மூளையில் காணப்பட்ட "புதிய பொருள்" ஒரு உயிருள்ள புழு என தெரிந்தது. அந்த புழு பிரகாசமான சிகப்பு நிறத்தில், சுமார் 3 இன்ச் (8 சென்டி மீட்டர்) நீளம் இருந்தது.
மலைப்பாம்புகளின் வயிற்றுக்குள்
அது ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற இனத்தைச் சேர்ந்த உருண்டைப் புழுவாகும். அவை அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, பப்புவா நியூ கினி போன்ற பிரதேசங்களில் வாழக்கூடிய மலைப்பாம்புகளின் வயிற்றுக்குள் மட்டுமே உள்ளது என்கிறனர்.
இந்த பெண்மணியின் வாழ்க்கை முறைக்கோ, தொழிலுக்கோ பாம்புகளோடு எந்த தொடர்பும் இல்லையென்றாலும் அவர் வசித்து வந்த பகுதியில் உள்ள ஏரியில் பாம்புகள் அதிகம் காணப்படும் என்பதால் அனேகமாக அவர் அதிகமாக உண்டு வந்த நியூசிலாந்து கீரை வகைகளில் அந்த புழுவின் முட்டைகள் இருந்து அவர் அதனை உண்ணும்போது உள்ளே சென்று, புழுவாக உயிர் பெற்று, இரத்தத்தில் கலந்து, மூளைக்கு சென்று, அங்கேயே உண்டு அதன் மூலம் உயிர் வாழ்ந்து வந்திருக்கலாம் என மருத்துவர்கள் யூகிக்கிறார்கள்.
இதுதான் உலகிலேயே முதல்முறை
"உயிருள்ள புழு ஒருவரின் மூளையில் வாழ்வது இதுதான் உலகிலேயே முதல்முறை. ஆனால் இதுபோன்ற மருத்துவ வழக்குகள் எதிர்காலத்திலும் வரக்கூடும்" என்கிறார் மருத்துவ குழுவிற்கு ஆலோசகராக செயல்பட்ட அவுஸ்திரேலியாவின் தலைநகர் கனடபரா பகுதியில் உள்ள இலங்கையையைச் சேர்ந்த தொற்று நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் டொக்டர். சஞ்சய சேனநாயக்க.