தொடருந்துகளில் மோதி நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் உயிரிழப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 103 காட்டு யானைகள் தொடருந்துகளில் மோதி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா தேவி வன்னியராச்சி (Pavithra Wanniarachchi) தெரிவித்துள்ளார்.
இதேவேளை காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்குப் தொடருந்து திணைக்களத்துடன் ஒன்றிணைந்து விசேட செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (9) இடம்பெற்ற அமர்வின் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு
அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்த நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் 103 காட்டு யானைகள் தொடருந்துகளில் மோதி உயிரிழந்துள்ளன.
காட்டு யானைகள் தொடருந்துகளில் மோதுவதைத் தடுப்பதற்கு முறையான பொறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய தொடருந்து திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு ஒன்றிணைந்து தொடருந்து பாதைகளில் காட்டு யானைகள் பயணம் செய்யும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
சாரதிகளுக்கு தெளிவுபடுத்தல்
இந்தப் பகுதிகளை விசேட பாதுகாப்பு பகுதிகளாகவும், கண்காணிப்பு பகுதிகளுக்காகவும் அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
காட்டு யானைகள் கடக்கும் பகுதிகள் குறித்து தொடருந்து சாரதிகளுக்கு தெளிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து பாதைகளில் வளைவு பகுதிகளைக் காட்டு யானைகள் கடக்கும் போது அவைகளை முன்கூட்டியே அவதானிக்கும் வகையில் விசேட இயந்திரங்கள் பொருத்துவதற்கும், தொடருந்து பாதை வளைவுகளைத் தொடர்ந்து பராமரிப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.“ எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |