மின்சார சபை பொறியியலாளர் சங்கத்திற்கு 14 நாட்கள் தடை உத்தரவு!
14 நாட்கள் தடை உத்தரவு
இலங்கை மின்சார சபை தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கான தொடர்ச்சியான மின்சார விநியோகத்துக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இன்று முதல் அடுத்த 14 நாட்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோம் அத்தியாவசியம்
இதேவேளை மின்சார விநியோகத்தை அத்தியாவசிய தேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார்.
1979ஆம் ஆண்டு 61ம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் பிரிவு இரண்டின் படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அரசு தலைவரால் வெளியிடப்பட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவு தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதனால் நேற்று காலை 8 மணி முதல் மின்சாரம் தடைபடும் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியலாளர் சங்கம் எச்சரித்திருந்தது.
கைவிடப்பட்ட வேலை நிறுத்தம்
எவ்வாறாயினும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்ததை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை தொழிற்சங்கம் கைவிட்டிருந்தது.
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட சட்டத்திருத்தங்கள் உள்ளடக்கப்படுவதை உறுதி செய்வதாக அரச தலைவர் அளித்த உறுதிமொழிக்கு மதிப்பளிக்கும் வகையில் வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கம் கைவிட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.