மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவதும், அதனை தலையில் தூக்கிக் கொண்டோடித் திரிவதும் தவறு.
தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் மாகாண சபைத் தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ஒன்றினை எதிர்வரும் ஜனவரியில் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
வடக்கு , கிழக்கு தெற்கு உள்ளடங்கலாக நாட்டின் சகல பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், சிவில்சமூகக் குழுக்களை ஒன்றிணைத்து மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் மக்கள் இயக்கமொன்றை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
தமிழ்த்தரப்பின் தலைமையின் கீழ் சிங்களக் கட்சிகள் செயற்பட முன்வருமா? என்ற சந்தேகம் எழுகின்ற அதேவேளை சிங்களக் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை உண்மையாக விரும்புகின்றனவா? என்பதிலும் சந்தேகங்கள் உண்டு.
இது விடயத்தில் மகாநாயக்கர்கள் சம்மதிப்பர்கள் எனவும் கூற முடியாது. அவர்களைப் பொறுத்தவரை மாகாணசபை இல்லாமலேயே அரசாங்கம் சுமூகமாக இயங்குகின்றது என்ற கருத்தே மேலோங்கி உள்ளது.
தேசிய மக்கள் சக்தி
மாகாநாயக்கர்கள் எதிர்த்தால் சிங்களக் கட்சிகள்; முன் வரப்போவதில்லை. தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செல்வாக்கினை வீழ்த்துவதற்கு மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்தலாமா? என்றே இக்கட்சிகள் யோசிக்கின்றன.
இவ் யோசனை உறுதியானது எனக் கூற முடியாது. தமிழ்க்கட்சிகளும் பெரிதாக ஒத்துழைக்கும் என சொல்வதற்கில்லை. ஜனநாயகத் தமிழத் தேசியக் கூட்டணி ஏற்கனவே இது தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தியுள்ளதால் சம்மதம் தெரிவிக்க முற்படலாம்.
ஆனாலும் அண்மைக்காலமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனான ஒப்பந்தம் முறிந்துவிடும் என்ற அச்சம் அதற்கு உள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 13 வது திருத்தத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி முன்னெடுத்தால் ஒப்பந்தத்திலிருந்து தானாக விலகிக் கொண்டதாகக் கருதப்படும் என முகத்திற்கு நேராகவே கூறிவிட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனான ஒப்பந்தத்தைக் காட்டியே தமிழரசுக் கட்சியுடன் அது பேரம் பேச முற்படுகின்றது. முன்னணியுடன் ஒப்பந்தத்தை முறித்தால் அதன் பேரம் பேசும் பலம் தானாகவே பலவீனமாகிவிடும். முன்னணியா? தமிழரசுக் கட்சியா? என்ற நிலை வந்தால் தமிழரசுக் கட்சியே அதன் விருப்பத் தெரிவாக இருக்கும்.
ஆனால் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி வாழையிலையிலை சாப்பிட விரும்புகின்றது. இதற்கு தமிழரசுக் கட்சி ஒருபோதும் தயாராக இருக்க மாட்டாது.
சுமந்திரன் இவ்விடயத்தினை பொறுத்தவரை மூன்று வியூகங்களை முன்வைத்து செயல்படுகின்றார். அதில் முதலாவது இந்தியாவை திருப்திப்படுத்துவது. சுமந்திரன் மேற்குலகின் ஆதரவாளர் என்பதால் இந்தியா சுமந்திரனை மானசீகமாக ஏற்கத் தயாராகவில்லை.
சுமந்திரனுக்கு எதிராக சிறீதரனை ஊக்குவித்ததில் இந்தியாவிற்கு பங்குண்டு என்றும் கடந்த காலத்தில் பேசப்பட்டது. இதனால் சிறீதரனை விட இந்தியாவின் பக்கம் தான் நிற்கின்றேன் என வலிந்து காட்ட வேண்டிய தேவை சுமந்திரனுக்கு உண்டு.
இந்தியா சிறீதரனோடு நிற்கும் வரை அவரை பலவீனப்படுத்துவது கடினம் என்பதும் சுமந்திரனுக்கு நன்கு தெரியும். சிறீதரனின் பலம் என்பது தமிழ்த் தேசிய சக்திகளின் ஆதரவும், இந்தியாவின் ஆதரவும்தான்.
சிறீதரனின் பக்கமே இந்தியா
சிறீதரன் தமிழ்த் தேசிய அரசியலில் தீவிரமாக இருப்பது இந்தியாவிற்கு சங்கடங்களை கொடுத்தாலும் சிறீதரனின் பக்கமே இந்தியா நிற்கின்றது. இந்திய தூதரகத்திற்கும் சிறீதரனுக்குமிடையே நல்ல உறவு நீண்ட காலமாக நிலவுகின்றது.
மக்கள் செல்வாக்குள்ள சிறீதரனை இழப்பதற்கு இந்தியா தயாராக இல்லை. தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாடு சுமந்திரனிடம் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு சிறீதரனிடமே இருக்கின்றது. இரண்டாவது முதலமைச்சராவதற்கான சுமந்திரனின் விருப்பம்.
பதவியில்லாவிட்டால் சுமந்திரனுக்கு அரசியல் செய்வது கடினம். தமிழ் அரசியல் தலைவர்களில் பலர் பதவி இல்லாவிட்டாலும் முக்கிய அரசியல் செயற்பாட்டாளர்களாக இருந்திருக்கின்றனர்.
தற்போதும் இருக்கின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளராக இருந்த அ.அமிர்தலிங்கம் 1970 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். ஆனாலும் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளராக அவரே இருந்தார்.
தேர்தல் முடிந்த அடுத்த நாளே அவர் கட்சிப் பணியாற்ற கட்சியின் தலைமையகத்திற்கு வந்துவிட்டார். தனது சட்டத்தரணி தொழிலையும் பார்க்காது முழு நேரமாக கட்சிப் பணிகளிலேயே ஈடுபட்டார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். போராட்டங்களையும் தலைமையேற்று நடாத்துகின்றார்.
சுமந்திரன் பதவிகள் இல்லா விட்டால் இயங்க மாட்டார். பதில் பொதுச் செயலாளர் பதவியையும் அதற்காகவே பெற்றுக்கொண்டார். அதுவும் போதாதினால் மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தினை எடுப்பதற்கு முயற்சிக்கின்றார்.
ஜனாதிபதியிடமும் தனது விருப்பத்தை நேரடியாக கூறியிருக்கின்றார். சாணக்கியனின் தந்தையாரின் மரணச்சடங்கில் ஜனாதிபதியைச் சந்தித்தபோது “நீங்கள் மாகாண சபை தேர்தலை நடாத்தவில்லையென்றால் நான் எப்போது முதலமைச்சராவது” என கேட்டிருக்கின்றார்.
மூன்றாவது சுமந்திரன் முன்னெடுக்கும் கொழும்பு மைய அரசியல். கொழும்பின் பெருந்தேசிய நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பெருந்தேசிய வாத நலனை கேள்விக்குட்படுத்தாத மேற்கொள்ளும் அரசியலே அதுவாகும்.
சிறிது காலம் தமிழ்த் தேசிய அரசியலோடு நிற்பதாகக் காட்டிக் கொண்டார். தமிழ்த் தேசிய சக்திகளும் சுமந்திரன் மாறிவிட்டார் என மகிழ்ச்சி கொண்டிருந்தனர். அந்த மகிழ்ச்சி எல்லாம் சொற்ப காலமே நீடித்திருந்தது.
கருத்துருவாக்கிகள் பலர் சுமந்திரனை விமர்சிப்பதையும் கூட நிறுத்தியிருந்தனர். ஆனால் தமிழ்த் தேசிய அரசியலின் தொடர்ச்சியை பேணுவதில் பழக்கமின்மையாலும், விருப்பமின்மையினாலும் சொற்ப நாட்களிலேயே அதனைக் கைவிட்டு விட்டு கொழும்பு மைய அரசியலுக்கு திருப்பிவிட்டார்.
எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தென்னிலங்கை அனர்த்தங்களை பார்வையிடச் சென்றதும் கொழும்பு மைய அரசியல் தான் தென்னிலங்கை அனர்த்தங்களைப் பார்வையிடச் சென்ற சுமந்திரன் இன்னமும் வடக்கு - கிழக்கு அனர்த்தங்களை பார்வையிடவில்லை.
அனர்த்தங்களினால் மன்னார் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இங்கு தென்னிலங்கை அனர்த்தங்களை பார்வையிடச் சென்றமை பிழை என இக்கட்டுரையாளர் வாதிட வரவில்லை.
தென்னிலங்கை எதிர்க்கட்சி
தென்னிலங்கை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சென்றமை கொழும்பு மைய அரசியலின் தொடர்ச்சி என்பதைத் தான் இங்கு கூற வருகின்றார். மாறாக தமிழ் கட்சிகள் குழுவாக நிவாரணப் பொருட்களுடன் பார்வையிடச் சென்றிருந்தால் அது வலிமையான செய்தியை சிங்கள மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் சொல்லியிருக்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதான காலத்தில் நிவாரணப் பொருட்களுடன் இவ்வாறான பயணத்தை மேற்கொண்டிருந்தனர். சுமந்திரன் மாகாண சபைத் தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க முனைந்தாலும் பெருந்தேசிய வாதத்தின் இனவாதப் பிரிவு சுமந்திரனோடு இல்லை.
பொதுஜன முன்னணியோ, விமல் வீரவன்ச, உதய கம்மன் பல ஆகியோரின் கட்சிகளோ சுமந்திரனோடு ஒத்துழைக்கப் போவதில்லை. பெருந் தேசியவாதத்தின் லிபரல் பிரிவு மட்டுப்படுத்தப்பட்ட ஒத்துழைப்பை வழங்கலாம்.
சஜித்தின் கட்சி மட்டும் ஒத்துழைப்பை வழங்கலாம். ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளித்தமைக்காக சஜித் பிரேமதாசா சுமந்திரனுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டியவராகவும் இருக்கின்றார் எனினும் மகாநாயக்கர்கள் எதிர்த்தால் சஜித்தும், கையை விரிப்பார்.
ரணில் விக்ரமசிங்க சுமந்திரனோடு இல்லை. இருவருமே தங்கள் இருப்பை நிலை நிறுத்துவதற்கு சூழ்ச்சிகளை நம்பியிருப்பவர்கள். இரண்டு சூழ்ச்சிக்காரர்கள் ஒரே உறையில் இருக்க முடியாது என்பதால் இவர்களுக்கிடையிலான உறவு வளர்வது கடினம்.
ஜனாதிபதித் தேர்தலில் தன்னை சுமந்திரன் ஆதரிக்கவில்லை என்ற கோபமும் ரணிலுக்கு உண்டு. மாகாண சபை முறை ஒற்றையாட்சிக்குட்பட்ட ஒரு முறையாகும். இங்கு மாகாண சபைகளுக்கு சுயாதீன இருப்பு எதுவும் கிடையாது. மத்திய அரசில் தங்கி நிற்கும் நிலையே உண்டு.
வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண சபை, கிழக்கு மாகாண சபை, வட மாகாண சபை என்பன அந்த அனுபவங்களையே தந்தன. மறுபக்கத்தில் மாகாணசபைத் தேர்தலுக்கென மக்கள் இயக்கத்தை அதுவும் தென்னிலங்கைக் கட்சிகளுடன் சேர்ந்து முன்னெடுப்பது தமிழ் மக்கள் ஆணை தந்த சமஸ்டிக் கோரிக்கையை பலவீனப்படுத்தவே செய்யும்.
தமிழ் மக்களின் அரசியல் சமஸ்டிக் கோரிக்கைக்கு செல்லக்கூடாது. மாகாண சபையைச் சுற்றியும், 13வது திருத்தத்தையும் சுற்றியே இருக்க வேண்டும் என்பது சர்வதேசச் சக்திகளினதும், பிராந்திய சக்தியினதும் விருப்பமாகும். தென்னிலங்கை சக்திகளின் விருப்பமும் அதுதான்.
இப்போக்கு நீண்ட காலத்திலாவது சமஸ்டிக் கோரிக்கை வெற்றியடைவதை பலவீனப்படுத்தும். இங்கு மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டாம் என கூற வரவில்லை.
அது அரசியல் யாப்பில் உள்ள விடயம். இந்திய சிபார்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை அரசு நடைமுறைப்படுத்தட்டும். உள்ளூராட்சிச் சபைகள் போல அது இருந்து விட்டுப் போகட்டும்.
அது அரசியல் தீர்வாக திணிக்கப்படுவதையும், அதனை தலையில் தூக்கிக் கொண்டோடித் திரிவதையுமே தவறு எனக் கூற வருகின்றார். இக் கொண்டோடித் திரிதல் தமிழ் மக்களின் தீர்வுக் கோரிக்கையை நிச்சயமாக குறை மதிப்பு செய்யும்.
மாகாண சபை முறையின் பயன் அது. ஒரு அரசியல் களத்தை உருவாக்கித் தரும் என்பதும், இந்தியப் பிடியை கொண்டு வரும் என்பதும் மட்டும் தான். இன்று தமிழ்ப் பிரதேசங்களில் சிறிய சிறிய பாடசாலைகள் கூட தேசிய பாடசாலைகள் என்ற வகைக்குள் வந்துள்ளன.
மாகாண சபை
பாடசாலை அதிகாரம் கூட மாகாண சபைக்கு குறைந்து வருகின்றது. இதைவிட மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கான மக்கள் இயக்கம் தமிழ் மக்கள் தேசமாக திரளைரையும் பலவீனப்படுத்தும். மக்கள் மத்தியில் பிரிவினைகளை உருவாக்கும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, தமிழ்த் தேசிய சக்திகளோ இதற்கு ஒத்துழைக்கப் போவதில்லை. சர்வதேச பிராந்திய சக்திகளும் மாகாண சபை முறையை அரசியல் தீர்வாக ஏற்கும் படி நிர்பந்திப்பர்.
உண்மையில் சுமந்திரன் மாகாண சபைத் தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தை முன்னெடுப்பதற்கு பதிலாக சமஸ்டித் தீர்விற்கான மக்கள் இயக்கத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். சமஸ்டியை ஆதரிக்கும் சிங்கள இடது சாரித் தலைவர்கள் பலர் இருக்கின்றனர்.
அவர்களோடு இணைந்து இதனை முன்னெடுத்திருக்கலாம். தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு பகுதிப் பணி சிங்கள மக்கள் மத்தியிலும் முன்னெடுக்க வேண்டியது அவசியமானது. யுத்த நிறுத்த காலத்தில் ரவிராஜ் இதனை முன்னெடுத்திருந்தார்.
தர்க்கரீதியாக ரவிராஜ் நேரடியாக கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் முன்வைத்த போது அதனை ஏற்கும் நிலை சிங்கள மக்களிடம் இருந்தது. நவசமாஜக்கட்சித் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன இதற்கு முழுமையாக ஒத்துழைப்பினை வழங்கினார்.
இன்னோர் இடதுசாரித் தலைவரான சிறீதுங்காவும் ஒத்துழைப்பை வழங்கினார். இக் கட்டுரையாளரை இணைப்பாளராகக் கொண்ட இனங்களுக்கிடையே சமாதானத்திற்கான ஆய்வகம் நவசமாஜக் கட்சியுடன் இணைந்து இதனை ஒழுங்கு செய்திருந்தது.
குருநாகல், அனுராதபுரம், இரத்மலானை, புத்தளம் ஆகிய இடங்களில் கருத்தரங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இக்கட்டுரையாளரும் உரையாற்றியிருந்தார். மொழிபெயர்ப்புப் பணிகளை இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசேப் ஸ்ராலின் மேற்கொண்டார்.
தமிழ் மக்களுக்கு பிரச்சினை
தமிழ் மக்களுக்கு இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றனவா? என பல சிங்கள மக்கள் நேரடியாகவே இக்கட்டுரையாளரிடம் கேட்டிருந்தனர். அரகலய போராட்டத்தின் போதும் இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
அரகலய போராட்ட செயற்பாட்டாளர்கள் பலர் யாழ்ப்பாணம் வந்தும் பல அமைப்புக்களோடு உரையாடியிருந்தனர். சமஸ்டிக் கோரிக்கையை அவர்கள் ஏற்றிருந்தனர். எனவே சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை கொண்டு செல்ல முடியாது என்ற நிலை இல்லை.
நிச்சயமாக கொண்டு செல்லலாம். அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அரசியல் தீர்வுக்கான மக்கள் இயக்கம் மட்டுமல்ல பொறுப்பு கூறலுக்கான மக்கள் இயக்கம், ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான மக்கள் இயக்கம், அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் போனோர் விவகாரம், காணிப்பறிப்பு விவகாரம் போன்ற நிலை மாறுகால நீதிக்கான மக்கள் இயக்கங்களையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது.
தற்போதைய காலம் என்பது தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் அகச் சூழலும், இனத்துவ சூழலும், சர்வதேசச் சூழலும் தமிழ் மக்களுக்கு ஏற்றதாக இல்லை. அகச்சூழலில் நோக்கு இழப்பு, நம்பிக்கை இழப்பு, செயற்பாட்டிழப்பு, செயற்பாடு ஆற்றல் இழப்பு என்பன ஏற்பட்டு வருகின்றன.
மறுபக்கத்தில் சிங்கள பௌத்த அரசு கருத்தியல் தெளிவுடனும், தெளிவான வழி வரை படத்துடனும், செயற்பாட்டு கட்டமைப்புககளுடனும் நுண்மையான ராஜதந்திர நகர்வுகளுடன் தமிழர் தாயகத்தில் ஊடுருவி வருகின்றது.
அதன் பிரதான இலக்கு சிங்கள பௌத்த தேசியவாதத்துக்குள் தமிழ்த் தேசிய அரசியலை கரைப்பதே! சர்வதேச சூழலும் தமிழ் மக்களுக்கு ஏற்றதாக இல்லை அங்கு அறம் இழப்பு, ஆளுகை இழப்பு, உலக ஒழுங்குக் குலைவு என்பன ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய அரசியலை தக்க வைப்பது முக்கியமானதாக உள்ளது. தமிழ் அரசியல் தற்போது தற்காப்புக் கட்டத்தில் உள்ளது. உலகமே வியக்கத்தக்க தாக்குதல் யுத்தத்தை நடாத்திய தமிழ் மக்கள் இன்று தற்காப்பு போராட்டத்தை நடாத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய அரசியலை தக்க வைத்துக் கொண்டால் எதிர்காலத்தில் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |