14வயது சிறுவனை கத்தியால் குத்திய 20வயது இளைஞன்..!
கத்திக்குத்து
காத்தான்குடி - கர்ப்பலா பிரதேசத்தில் வீதியால் சென்ற 14 வயது சிறுவன் மீது, 20 வயது இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ தினமான நேற்று மாலை சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான், இதன் போது வீதியில் நின்ற இளைஞன், சிறுவனைப் பார்த்து “என்னடா என்னை பார்க்கின்றாய்” என கேட்டுக் கொண்டு சிறுவன் மீது கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்டார்.
போதைப்பொருள் பாவிக்கும் குற்றவாளி
இதனையடுத்து சிறுவன் கத்தியதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்ததுடன், கத்திகுத்து தாக்குதலை நடத்திய இளைஞனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து குறித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்ததுடன், இவர் போதைப்பொருள் பாவிப்பதாகவும் இதனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததாக குறிப்பிட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்

