15 சிறுவர்களின் உயிரைக் காக்க இலவச இதய சத்திரசிகிச்சைகள்: கராப்பிட்டியவில் களமிறங்கிய வெளிநாட்டு மருத்துவக் குழு
இலங்கையில் சத்திரசிகிச்சை மூலம் சிகிச்சையளிப்பது கடினமான, மிகவும் சிக்கலான இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 15 சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில், வெளிநாட்டு விசேட மருத்துவக் குழுவொன்று காலி கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் இலவச இதய சத்திரசிகிச்சைகளை முன்னெடுத்து வருகிறது.
‘டேக் ஹார்ட் மெர்சி மிஷன்’ (Take Heart Mercy Mission) எனும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இந்த மருத்துவக் குழு, இலங்கை மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து இச்சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த 22ஆம் திகதி கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதாரப் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் சத்திரசிகிச்சைகள் மற்றும் ஏனைய மருத்துவ நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
பிறவியிலேயே ஏற்படும் இதயக் குறைபாடு
சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ‘டேக் ஹார்ட் மெர்சி மிஷன்’ அமைப்பு, பிறவியிலேயே ஏற்படும் இதயக் குறைபாடுகளால் பாதிக்கப்படும் இலங்கைச் சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது.

இதய சத்திரசிகிச்சை நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட இந்த சர்வதேச மருத்துவக் குழு, ஒவ்வோர் ஆண்டும் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு வருகை தந்து, இலங்கை சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து உயிர்காக்கும் சிகிச்சைகளை இலவசமாக வழங்கி வருகின்றது.
இந்த வேலைத்திட்டத்திற்காக அரசாங்கத்திற்கு எவ்வித நிதிச் சுமையும் ஏற்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சைகளுக்கான செலவுகள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் குறித்த தொண்டு நிறுவனமே வழங்கி வருகின்றது.
தனிநாடு - கூட்டாட்சிக் கோரிக்கை பயங்கரவாதமல்ல என்கிறார் அமைச்சர் ஹர்ஷன நானயக்கார - ஈழத்தமிழ் மீது விரிக்கப்படும் வலையா...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |