தமிழர் வரலாற்றில் ஈழவர்களின் மாவீரர் நாள்
வானமும் கீழிறங்கி முத்தம் கொடுக்கும், எங்கள் கல்லறை மேனியரை கைகள் தொழுது நிற்கும்.
கந்தக நெடியிலே காலம் கழித்து எங்கள் சொந்தமண் விடிவிற்காய் வீழ்ந்த விதைகளின் முகம்காணும் கார்த்திகை மாதமிது.
கிழங்கோடிக் கொடி படர்ந்து கார்த்திகைச் செடியில் காந்தள் மலர்கள் சிரிக்கும் காலத்தில் கல்லறை மேனியருக்கு தீபமேந்தும் எங்கள் கரங்கள்.
வீர மரபு
போரிலே தன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களை வணங்கும் மரபு தமிழர்களிடம் காணப்படுகிறது. போரில் வீழ்ந்து தன் இனத்தைக் காத்த வீரர்களின் நினைவாக நினைவுக்கல் நாட்டி வழிபடும் இந்த மரபு சங்க காலத்திற்கு முன்னைய தொன்மைக் காலம் தொட்டு வழக்கத்தில் இருந்து வருகின்றது.
முன்னைய காலத்தில் இறந்தவர்களின் உடலைப் புதைக்கும் வழக்கமே இருந்து வந்துள்ளது. எனினும் பிற்பட்ட காலத்தில் கலாசார மாற்றங்களின் அடிப்படையில் இறந்த உடலை எரிக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. மத அடிப்படையில் இச்செயற்பாடுகள் வேறுபடுகின்றன.
போரில் இறந்த வீரர்களை வீர சுவர்க்கம் அடைந்தவர்கள் என்று மரியாதை செலுத்தி நடுகல் நாட்டி வணங்கிய வரலாற்றைப் புறநானூறு எடுத்தியம்புகின்றது. இவ்வழக்கம் பிற்காலத்திலும் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதை இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகின்றது.
போரில் இறந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்படுகின்ற நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாகத்தான் இன்றைய கிராமியத் தெய்வ வழிபாடுகள் தோற்றம் பெற்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காத்தவராயன், அண்ணன்மார், கன்னிமார் போன்ற கிராமியத் தெய்வ வழிபாட்டு முறைகள் நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியைத்தான் பறைசாற்றி நிற்கின்றன.
இற்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சீனப் போரியல் அறிஞரான சன்சூ என்பவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிற உலகப் போரியல் நுணுக்கங்களும் அதன் தந்திரோபாயங்களும் என்னும் நூலில், எவன் ஒருவன் போரில் இறந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்திக் கௌரவப்படுத்துகின்றானோ அவனே சிறந்த வீரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இதேபோல போரில் இறந்தவர்களுக்கு எவ்வாறு கல்லறை அமைத்து வழிபட வேண்டும் என்பதை அர்த்த சாஸ்திரம் என்னும் நூலும் எடுத்தியம்புகின்றது. சங்ககாலத்திற்கு முன்னைய தொன்மைக்காலம், சங்ககாலம் என்று வரலாற்றின் நீட்சியில் காலப்பெருவெளியினூடாகக் கடத்தப்பட்டு வந்த இந்த நடுகல் வழிபாட்டு முறையைப் புறநானூற்றின் வழித்தோன்றல்களென ஈழத் தமிழ் மக்கள் பின்பற்றி வருகின்றார்கள்.
ஈழவர்களின் மாவீரர் நாள்
தமிழீழ விடுதலைப்போரில் முதன்முதலாக வித்தாகிய லெப்ரினன் சங்கர் வீரமரணமடைந்த நாளாகிய கார்த்திகை 27 இனை இறுதி நாளாகக் கொண்டு கார்த்திகை 21 ஆம் திகதியிலிருந்து கார்த்திகை 27ஆம் திகதிவரை தாயகத்தில் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாரத்தின் இறுதிநாளான கார்த்திகை 27ஆம் திகதி லெப்ரினன் சங்கர் வீரமரணமடைந்த நேரமாகிய மாலை 06.05 மணிக்கு, களத்திலே வித்தாகிய வீரர்கள் விதையெனத் துயிலும் இல்லங்களில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்படும்.
களத்திலே தலை வீழ்ந்தும் உடல் சாயாத பாடான்திணை வீரர்களென வித்தாகிப்போன மறவர்களை நினைத்து அவர்களின் பெற்றவர்களும் உற்றவர்களும் உடன்பிறப்புக்களும் தோழர்களும் நெஞ்சுருகி விழிநீர் சொரிந்து நிற்பர். இருளைக் கிழித்து விளாசும் தீபங்களில் வேங்கைகள் நினைவுகூரப்படுகின்றனர்.
வரலாற்றில் மாவீரர் நாள்
1989 ஆம் ஆண்டு தாயகத்தில் முதலாவது மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்திய இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மணலாற்றுக் காட்டுப்பகுதியில் நள்ளிரவு 12.01 மணிக்கு தீபமேற்றி 1307 மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர் என்கிறது குறிப்புகள்.
அக்காலப்பகுதிக்கு முன்னர் களப்பலியானவர்களின் உடல்கள் அவர்களது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டு அவரவர் குடும்ப வழமைக்கு ஏற்ப இறுதிக்கிரியைகள் இடம்பெற்று வந்தன. காடுகளில் கடும் சமரின்போது இறக்கும் வீரர்களின் உடல்கள் மட்டும் அக்காடுகளிலேயே விதைக்கப்பட்டன.
பின்னர் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழத் தேசியக்கொடி அறிவிப்பினைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டில் மாவீரர்களுக்குக் கல்லறை அமைக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது.
“வீரமரணமடைகின்ற மாவீரர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது. அவ்வாறு விதைக்கப்பட்ட மாவீரர்களின் இடத்தில் கல்லறைகள் எழுப்பப்படும். அக்கல்லறையில் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு எமது தேசிய நினைவுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்படும்.
இவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக்கொண்டே இருக்கும். இந்த மாவீரர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச்சொத்தாக, பொக்கிஷங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிஷங்கள் வெறும் புனைவுகளாகவும் எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக்கூடாது.
அவை பொருள் வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அதற்காகத்தான் கல்லறைகளை அமைப்பதற்கு நாம் முடிவெடுத்தோம்.” என்கின்ற அறிவிப்புடன் கல்லறை எழுப்பி இறந்த வீரர்களை நினைவுகூரும் வழக்கம் 1991ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
1998 ஆம் ஆண்டு 14,435 மாவீரர்களின் நினைவாகத் தீபமேற்றப்பட்டு தாயகம் நினைவுகூர்ந்தது. 2007ஆம் ஆண்டு 19,887 மாவீரர்களுக்கும், 2008 ஆம் ஆண்டு 24,600ற்கும் மேற்பட்ட மாவீரர்களுக்குமாகத் தீபங்கள் ஏற்றப்பட்டன.
முள்ளிவாய்க்காலின் பின்னர்
உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழினம் வருடந்தோறும் இம்மாவீரர்களை மௌனமாக வணங்கும் கார்த்திகை நாளில் காந்தள் மலர்களும் கவிபாட, எழுந்த முகில்கள் இறங்கி அழ, வீரர்களை நினைத்துருகும் மாவீரர் நாள் 2009 முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்பு பல சவால்களைச் சந்தித்தே கடந்து போகின்றது.
யுத்தம் மௌனித்த பிற்பாடு இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்கள் மக்களின் சுதந்திரமான நினைவுகூரலைத் தடைசெய்திருந்தன.
அப்போது ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச அரசு இராணுவத்தின் உதவியோடு தாயகத்தில் அமைக்கப்பட்டிருந்த அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையும் இடித்து அழித்தது மட்டுமன்றி இராணுவ அரண்களையும் அமைத்திருந்தது.
மீள்குடியேற்றத்தின்போது மீளவும் தமது சொந்த மண்ணுக்குத் திரும்பிய மக்கள் கல்லறைகள் சிதைக்கப்பட்டு வெட்டவெளியாகவே மாவீரர் துயிலும் இல்லங்களைக் கண்டனர். அனேகமான இடங்களில் இராணுவம் தளங்களை அமைத்து தமது பாவனைக்கு உட்படுத்தியிருந்தது. அக்காலப்பகுதியில் அரசின் கடும்போக்கிற்கு மத்தியிலும் தமது வீடுகளின் சுவாமி அறையில் தீபம் ஏற்றி மாவீரர்களை மக்கள் நினைவுகூர்ந்தனர்.
2015 இல் மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இந்த நிலைமைகள் சற்று மாறுபட்டன. மக்கள் ஒன்றிணைந்து விடுவிக்கப்பட்ட துயிலும் இல்லங்களைத் துப்புரவு செய்து கல்லறைகளின் தடங்களைச் சேகரித்து மீளவும் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுத்தனர். தடைகள் கடந்தும் தம் பிள்ளைகளுக்காய் தீபமேற்ற அணியெனத் திரண்டு நெஞ்சுருகி நின்றனர்.
கிளிநொச்சியின் கனகபுரம் துயிலும் இல்லம், முழங்காவில் துயிலும் இல்லம், மன்னாரின் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லம், யாழ் மண்ணின் துயிலும் இல்லங்கள், முல்லை மண்ணின் துயிலும் இல்லங்கள், கிழக்கு மண்ணின் துயிலும் இல்லங்கள் எனத் தாயகம் எங்கும் விதைத்திருக்கின்ற வித்துக்களைத் தம் விழிநீரால் அர்ச்சித்தனர்.
நல்லாட்சி அரசிற்குப் பின்பு 2019 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் தடைகளும் அச்சுறுத்தல்களும் காணப்பட்டாலும் அவ்வாண்டும் மக்கள் எழுச்சியோடு துயிலும் இல்லங்கள் எங்கும் தீபமேற்றினர்.
சமகாலத்தின் தேவை
தாய்நிலம் இக்கார்த்திகை நாளைத் தடைகள் பலவற்றைத் தாண்டி உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து வருவதைப்போல ஈழவர்கள் ஒவ்வொருவரும் வீரமரணம் அடைந்த மாவீரர்களின் பெற்றவர்கள், உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்தத்தின்போது விழுப்புண் அடைந்து வாழ்வியலோடு போராடிக்கொண்டிருக்கிற உறவுகளை உன்னிப்பாக அவதானித்து அவர்களுக்கான பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
நிலத்திற்காகவும் விடிவிற்காகவும் தன் மகனையோ அல்லது மகளையோ கொடுத்த தாயிற்கும் தந்தைக்கும் இந்தச் சமூகமே பிள்ளைகளாக இருக்க வேண்டிய தார்மீகக் கடமை இருக்கிறது.
பிரதான வீதிகளைக் கடந்து உள்ளூர் தெருக்களின் மறைவில் வலியோடும் வாழ்வோடும் போராடிக்கொண்டிருக்கிற மாற்றுத்திறனாளிகள், சக்கர நாற்காலியில் இருந்தபடி காலத்தோடு போராடுகிறவர்கள், முதுமையிலும் நோயிலும் தள்ளாடுகிற முதிய பெற்றவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என எண்ணற்ற பட்டியல் நம்மிடம் இருக்கிறது.
யுத்தம் ஈழவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டது. ஆனால் இரத்தக்கறை எல்லோருடைய கைகளிலும் இருக்கிறது. யுத்தம் கொடுத்த வடுக்களோடும், சந்ததிகள் கடந்தும் தொடரப்போகிற உளச்சிக்கல்களோடும் வாழ்ந்து வருகிற நமது மக்களின் அமைதியான வாழ்விற்குக் கரம் கொடுப்பதற்கான சிந்தனை எழுச்சியும், அவை தொடர்பான புரிதலும் அதிகமாக உணரப்படுகிறது.
தவிர, மாவீரர் பெற்றோர் கெளரவிப்புக்கள், கவனிப்புக்கள், துயிலுமில்ல துப்புரவாக்குதல் பணிகள் மற்றும் பராமரிப்புக்கள் போன்றவை கார்த்திகை மாதத்திற்கானது மட்டுமன்று அது வருடம் 356 நாட்களுக்குமானது என்கிற புரிதல் அவசியமாகிறது.
இப்புரிதலும் செயற்திறனும் வலுவாக இருந்தால் நாங்கள் தீபம் ஏற்றுகிற ஒவ்வொரு மாவீரர் தினத்தினதும் கனதி கூடிக்கொண்டே செல்லும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |