அடக்குமுறைகளை உடைத்தெறிந்த களப்போராளி எம்.கே. சிவாஜிலிங்கத்தின் அரசியல் தடங்கள்
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் சுயநிர்ணயக் கோரிக்கைகளுக்காக அயராது உழைத்த ஒரு முக்கிய மற்றும் முன்னணி அரசியல்வாதியைத் தமிழ் சமூகம் இழந்துள்ளது.
எம்.கே. சிவாஜிலிங்கம் என அழைக்கப்படும் மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (69), உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததோடு, தமிழ்த் தேசியத்திற்காக ஒலித்த துணிச்சலான குரலும் ஓய்ந்துள்ளது.
இலங்கைக் காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பின்வாங்காது, தொடர்ந்தும் தமது மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்த மூத்த அரசியல் தலைவராவார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் சுயநிர்ணயக் கோரிக்கைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அவரது மறைவையொட்டி, ஐ.பி.சி தமிழ் ஊடகம் அவரது துணிச்சலான அரசியல் நகர்வுகள், மக்கள் பணிகள் மற்றும் கொள்கைப் பிடிப்புகளை விரிவாக ஆவணப்படுத்துகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
2009ஆம் ஆண்டு ஈழப்போர் மௌனிக்கப்பட்ட பின்னரும், போராட்டத்தின் அடையாளமாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் முன்னெடுத்திருந்தார் சிவாஜிலிங்கம்.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இராணுவம், காவல்துறை மற்றும் அரச புலனாய்வாளர்களின் கடும் கெடுபிடிகள் நிலவிய காலகட்டத்தில், உயிர் அச்சுறுத்தல்களையும் நீதிமன்றத் தடைகளையும் பொருட்படுத்தாது நந்திக்கடற்கரைக்கு நேரில் சென்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னின்று நடத்திய பெருமை சிவாஜிலிங்கத்தையே சாரும்.
போரினால் உயிரிழந்த உறவுகளுக்காகச் சுடரேற்றுவதையும், மாவீரர் நாள் மற்றும் திலீபன் நினைவேந்தல்களை முன்னெடுப்பதையும் எவராலும் தடுக்க முடியாது என அவர் உறுதியுடன் களத்தில் நின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் குரல்
யுத்த காலத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி தேடும் பொருட்டு, இலங்கையைக் கடந்து பல்வேறு சர்வதேச அரங்குகளிலும், சர்வதேச ஊடகங்களிலும் தனது குரலை இவர் பதிவு செய்துள்ளார்.
ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி தேடும் அவரது பாதையில் முக்கிய கோரிக்கைகளாகச் சர்வதேச விசாரணை, சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைத்தல், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஐ.நாவும் சர்வதேசமும் அங்கீகரிக்க வேண்டும் எனப் பல கோரிக்கைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
இதில் குறிப்பாக, ஜெனிவா மனித உரிமைகள் பேரவை வரை சென்று தனது நிலைப்பாடுகளையும் நீதிக்கான தேடலையும் வலுவாகப் பதிவு செய்திருந்தார்.
இலங்கையின் 2010 மற்றும் 2019 ஜனாதிபதித் தேர்தல்களில் ஒரு தமிழர் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்பதே யதார்த்தம்.
எனினும், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அழுத்தமாகப் பதிவு செய்வதற்காகவே அவர் வேட்பாளராகக் களமிறங்கினார்.
குறிப்பாக, 2019 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பொதுக் கோரிக்கைகளை முன்வைத்துப் போட்டியிடுவதற்காக, தான் வகித்து வந்த ரெலோ (TELO) அமைப்பின் தவிசாளர் பதவியையும் துணிச்சலாகத் துறந்திருந்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை
மேலும், போர் முடிவடைந்த பின்னரும் பெரும் சவால்களுக்கு முகங்கொடுத்துச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்கவும் முன்னின்று செயற்பட்டார்.
முக்கியமாக, இது குறித்து முன்னெடுக்கப்பட்ட வீதிப் போராட்டங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் சிவாஜிலிங்கம் முன்னிலை வகித்தார்.
அத்துடன், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட நில ஆக்கிரமிப்புகள் மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு எதிராகவும் அவர் நேரடியாகக் களமிறங்கிப் போராடினார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய சிவாஜிலிங்கம், 2001 மற்றும் 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றினார்.
தொடர்ந்து 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், தன் சொந்த ஊரான வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராகவும் பொறுப்பு வகித்தார்.
தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஓரணியில்
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் பின்னர், ஏனைய உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் தனது பதவிகளை விட்டுக்கொடுத்த அவரது தன்னலமற்ற பண்பைச் சக அரசியல் தலைவர்களும் பாராட்டியிருந்தனர்.
மேலும், இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மக்கள் வழங்கிய நிதியுதவியில் சிகிச்சை பெற்ற பின்னர், எஞ்சிய நிதியைச் சமூக நலனுக்கும் மாவீரர் குடும்பங்களுக்கும் வழங்குவதாக அறிவித்திருந்தார்.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது கொள்கைகளில் தளராமல் வாழ்ந்த அவர், தமிழ் மக்களின் விடிவுக்காக அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதையே தனது இறுதி விருப்பமாக வலியுறுத்தி வந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |