ஊடகத்துறையின் முன்னுதாரணம்: தர்மலிங்கம் சிவராமின் நினைவு தினம்(video)
தராகி என்றழைக்கப்படும் ஊடகவியலாளர் தர்மலிங்கம் சிவராமின் 17வது நினைவுத்தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதியன்று இரவு வேளையில் கொழும்பு பம்பலபிட்டி காவல் நிலையத்துக்கு முன்னால் வைத்து நான்கு பேரால் சிவராம் கடத்திச்செல்லப்பட்டார்.
பின்னர் அடுத்த நாள் காலையில் நாடாளுமன்றுக்கு அருகில் உள்ள பாலம் ஒன்றின் அருகில் தாக்கப்பட்டு தலையில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உடலமாக மீட்கப்பட்டார்.
1988 இல் சக ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் மற்றும் நடிகரான ரிச்சர்ட் டி சொய்சாவின் உந்துதலால், ஐக்கிய நாடுகளின் நிதியுதவி பெற்ற இண்டர் பிரஸ் சேர்விசின் செய்தியாளராக நியமனம் பெற்றார்.
1989 இல், தெ ஐலேன்ட் செய்தித்தாளுக்கு அரசியல் ஆய்வாளர் ஒருவர் தேவைப்பட்டபோது, டி சொய்சா சிவராமை பரிந்துரைத்தார்.
இதன்போது தெ ஐலேன்ட் செய்தித்தாளின் ஆசிரியரான காமினி வீரகோன், சிவராமின் புனைப்பெயராக சிங்களத்தில் தாரக அதாவது நட்சத்திரம் என்று முன்மொழிந்தார், ஆனால் ஒரு துணை ஆசிரியர் தற்செயலாக அதற்கு பதிலாக தராகி என்று அச்சிட்டு விட்டார் அதுவே சிவராமின் புனைப்பெயராக மாறியது.
1990 ஆம் ஆண்டு டி சொய்சா தனது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட பின்னர், ரிச்சர்ட் டி சொய்சாவின் உடலத்தை அடையாளம் காண சிவராம் உதவினார்.
சுதந்திர ஊடகவியலாளரான சிவராம், தி ஐலண்ட், தி சண்டே டைம்ஸ், தமிழ் டைம்ஸ் ஒஃப் லண்டன், தி டெய்லி மிரர் மற்றும் தமிழ் செய்தித்தாள் வீரகேசரி உட்பட பல செய்தித்தாள்களில் எழுதி வந்தார்.
1997 ஆம் ஆண்டில், சிவராம் தமிழ்நெட்.கொம் தன்னை ஒரு தமிழ் செய்தி நிறுவனமாக மறுசீரமைப்பதற்காக, தமது சொந்த செய்தியாளர்களுடன் சிவராம் உதவினார், அத்துடன் தாம் இறக்கும் வரை அதன் மூத்த ஆசிரியராக சிவராம் செயற்பட்டார் சிவராமின் கட்டுரைகள் தமிழ் மக்களின் யதார்த்தங்களை பிரதிபலித்ததுடன், சிறந்த அரசியல் எதிர்வுகளையும் கொண்டமைந்திருந்தன.
அத்துடன் அவருடைய புலனாய்வு தேடலும் சிறப்பான ஆக்கங்களை மற்றும் செய்திகளை தமிழ் மற்றும் ஆங்கில வாசகர்களுக்கு தந்தது.
வடக்குகிழக்கு மட்டுமன்றி மலையகம தொடர்பாகவும் பல உண்மை தகவல்களை கொண்டிருந்த அவர், பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதன் பின்னணியையும் தெரிந்து வைத்திருந்தார்.
அதனை ஏனைய ஊடகவியலாளர்களுக்கு பகிரவும் முன்வந்தார். எனினும் அவர் அந்த தகவல்களை ஏனைய ஊடகவியலாளர்களுக்கு குறிப்பாக மலையக ஊடகவியலாளர்களுக்கு பகிரும் முன்னதாகவே அவரின் இறப்பு நிகழ்ந்தது.
இந்தநிலையில் ஊடகவியலாளர் என்பதுடன் சிறந்த குணம் கொண்ட மனிதனாக திகழ்ந்த சிவராம், ஊடகவியலாளர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.
இதேவேளை சிவராம் சுட்டுக்கொல்லப்பட்டு 17 வருடங்களாகியும் இன்னும் அவரை கொலை செய்தவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

