கொழும்பில் வெளிச்சத்துக்கு வந்த பாரிய நில மோசடி - பிரித்தானியா வாழ் தமிழர் ஒருவர் கைது!
பிரித்தானியாவை தளமாகக்கொண்ட நிறுவனமொன்றின் பங்குதாரர்கள் இணைந்து கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் காணியொன்றை கொள்வனவு செய்து அதனை மீண்டும் விற்பனை செய்ததில் 195 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக பிரித்தானியா வாழ் தமிழர் ஒருவரையும் இணைத்து சிறிலங்கா குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பிரித்தானிய தமிழர்களை மையப்படுத்திய இந்த விடயம் கொழும்பு ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது .
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட அக்சஸ் டிரக்ட் யுகே லிமிடெட் Access Direct UK Ltd) என்ற நிறுவனத்தின் பத்து பங்குதாரர்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட துணை நிறுவனமானAccess Direct Colombo Ltd ஊடாக கடந்த 2004 ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி காலி வீதியில் 219.5 பேர்ச்சஸ் காணியை கொள்வனவு செய்திருந்தனர்.
வெளிச்சத்துக்கு வந்த மோசடி
1.3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை முதலீடு செய்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த காணி பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டள்ளது.
இந்தக் காணியை விற்பனை செய்வதில் முதன்மைத் தொடர்புப் புள்ளியாகச் செயல்பட்ட பங்குதாரர்களில் ஒருவரான கதிர்வேற்பிள்ளை சற்குணம் என்பவர் ஏனைய பங்குதாரர்களை ஏமாற்றியதாக குறித்த பங்குதாரர்களில் ஒருவரான பிரித்தானிய குடியுரிமை கொண்ட இன்னொருவரான நவரத்தினம் பரமகுமாரன் என்பவர் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்திருந்தது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நிலம் 790 மில்லியன் ரூபாய்க்கு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிதியில் 595 மில்லியன் ரூபா நிதியே Access Direct UK Ltd நிறுவனத்க்கு வழங்கப்பட்டதுடன், மீதமாகவுள்ள 195 மில்லியன் ரூபா மோசடிக்குள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத் தடை
இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதன்மை சந்தேக நபரான கதிர்வேல்பிள்ளை சற்குணம் மீது பயணத் தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த ஆண்டு சந்தேகநபரான சற்குணம் மீண்டும் இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டுநாயக்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
எனினும், கதிர்வேல்பிள்ளை சற்குணத்தை தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த வழக்கு மே மாதம் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
