ஒரு மணித்தியாலத்திற்கு 20 ஆயிரம் ரூபா யாசகம்! 3 குழந்தைகளுடன் பெண் கைது
கொழும்பு - ஹைட் பார்க் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் யாசகம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பெண் சுமார் ஒரு மணித்தியாலத்தில் கிட்டத்தட்ட 20,700 ரூபாவை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் பாதுகாப்பில் இருந்த 2 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவு
அதற்கமைய, பாடசாலை செல்லும் வயதுடைய இரண்டு பிள்ளைகளும் தற்போது மீரிகம - மகாபோதி பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
02 வயது மதிக்கத்தக்க மற்றைய குழந்தையின் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய நிலையில் மொரட்டுவை - பிரேமா சிறுவர் இல்லத்திற்கு மாற்றுமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது.
பெண்ணொருவர் காவல்துறையினருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண்ணையும் அவரது மூன்று பிள்ளைகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாசகம் பெறும் பெண்
யாசகம் பெறும் பெண்ணும் மூன்று பிள்ளைகளும் கொழும்பு ஹைட் பார்க் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, முறைப்பாடு செய்த பெண் ஒரு குழந்தைக்கு நன்கொடை அளித்துள்ளார்.
அந்த பணத்தையும் யாசகம் பெறும் பெண் பெற்றுக் கொண்டதனால் இந்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, யாசகம் பெறும் பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |