குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் அரசியல் இலாபம் தேடும் அநுர - சாடும் எம்.பி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை அறிக்கை நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி ஏன் பின் வாங்குகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த (Kavinda Jayawardena) ஜயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இடம்பெற்று ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், இதுவரை நீதி கிடைக்கவில்லை.
நீதி கிடைக்கவில்லை.
ஆட்சிக்கு வந்து 3 மாத காலத்தில் உண்மை சூத்திரதாரியை பகிரங்கப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வாக்குறுதியளித்தார். ஆனால் அவர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) குண்டுத்தாக்குதல்கள் பற்றி பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளார்.
தனது ஆட்சியில் உண்மையை பகிரங்கப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்குமா என்பதை எதிர்பார்த்துள்ளோம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆகிய அறிக்கை சமர்ப்பித்துள்ளன.
30 வருட கால யுத்தத்தின் வடுக்கள்
இந்த அறிக்கையின் பரிந்துரைகளை முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆகியோர் செயற்படுத்தவில்லை. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் அது குறித்து கவனம் கொள்ளவில்லை.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பும் சந்தர்ப்பத்தில் கடந்த கால விசாரணைகளின் விபரங்களே குறிப்பிடப்படுகின்றன. புதிதாக எந்த தகவல்களும் குறிப்பிடப்படுவதில்லை.
கோட்டாபய ராஜபக்சவை போன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் குண்டுத்தாக்குதல் விவகாரத்தை தனது வெற்றிக்கு பயன்படுத்திக் கொண்டார் என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க கூடாது.
30 வருட கால யுத்தத்த்தின் வடுக்கள் இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் உள்ளன அதேபோன்று தான் குண்டுத்தாக்குதலின் பாதிப்பு இன்றும் எம் மத்தியில் உள்ளது. ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு தொடர்ந்து போராடுவோம்'' என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |