கட்டுநாயக்கவில் வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கைதான இளம் வர்த்தகர்
வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றுகொண்டிருந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (21) அதிகாலை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அவிசாவளை, எபலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
42,000 சிகரெட்டுகள்
சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதி மற்றும் 03 பெட்டிகளுக்குள், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 'பிளாட்டினம்' ரகத்தைச் சேர்ந்த 42,000 சிகரெட்டுகள் அடங்கிய 210 சிகரெட் காட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த சிகரெட் தொகை விமான நிலைய அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி சுமார் 63 இலட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |