கோட்டாபயவின் கவசமாக 21ஆவது திருத்தம் - துஷார இந்துனில் சுட்டிக்காட்டு
கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரங்களைப் பாதுகாக்க முயற்சி
தற்போது அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 21ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்குப் பயனளிக்காத சரத்துக்களை உள்ளடக்கியிருப்பதுடன் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரங்களைப் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.
அவருடைய அதிகாரங்கள் இத்தவணையில் இல்லாமல் அடுத்த தவணையிலேயே குறைக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் தான் அவரது அதிகாரங்களைக் குறைக்கக்கூடிய அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் நடைமுறைக்குவரும் என்றால், இதனைக் கொண்டுவருவதற்கான காரணம் என்ன? இதனை என்ன தேவைக்காகக் கொண்டுவருகின்றார்கள் என்று தெரியவில்லை.
நாட்டுமக்களுக்கு பாரிய நெருக்கடி
இவ்வாறானதொரு பின்னணியில் தான் நாட்டுமக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் மூன்று வேளையும் போசாக்கான உணவை உட்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கிடைக்கப்பெற்ற நிறைவேற்றதிகாரங்களே இந்த நெருக்கடி நிலை தோற்றம் பெறுவதற்குப் பிரதான காரணமாகும்” என்றார்.
