செம்மணி மனித புதைகுழி: இன அழிப்பை மறுக்கும் நீதியின் எதிரொலி
யாழ்ப்பாணத்தில் (Jaffna) செம்மணி மனித புதை குழி தொடர்பிலான மனித உரிமை மீறல் செயற்பாடு தீவிரமாக தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், தற்போது வரை செம்மணியில் 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ் நீதிமன்ற நீதவான் ,சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரின் மேற்பார்வையில் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த யுத்த காலத்தின் போது காணாமல் போனவர்களின் தங்களின் உறவினர்கள் கூட இதில் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும் அது அவ்வாறு இருக்க கூடாது என உறவுகள் தவிக்கின்றனர்.
இதற்காக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சுமார் 16 வருடங்களாக நீதி மறுக்கப்பட்ட நிலையில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் போராடி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் திருகோணமலை மாவட்ட வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்க தலைவி செபஸ்டியன் தேவி தெரிவிக்கையில் " எங்கள் உறவுகளையே கடத்தப்பட்டு சிறுவர்கள் குடும்பம் குடும்பமாக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு புதைத்துள்ளார்கள் இதனை நினைத்து பார்க்கையில் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாரிய தாக்கங்களுக்கு நாங்கள் ஆளாகியுள்ளோம் செம்மணி மனித படுகொலை புதை குழியில் ஒரு வயது குழந்தை தொடக்கம் 15 வயது வரையான குழந்தைகள் குடும்பத்துடன் கொல்லப்பட்டுள்ளார்கள்.
பொம்மையுடன் விளையாடிய குழந்தைகளை கூட குடும்பத்துடன் கொலை செய்துள்ளார்கள் என அகழ்வு பணியின் போது தெரியவருவதுடன் மனதை உருக்கும் அதிர்ச்சி சம்பவமாக காணப்படுகிறது எங்களுக்கான நீதியை சர்வதேசம் தான் பெற்றுத்தர வேண்டும்.
இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட உறவுகளை கொன்று குவித்தார்கள் இதனால் இதை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு சர்வதேச விசாரனைகள் ஆய்வுகள் மூலமாக தண்டிக்கப்பட வேண்டும்.
இல்லாது போனால் தொடர்ந்தும் தமிழர்களை அழிக்க முற்படுவார்கள் எனவே தான் நீதி மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கிறோம் இதற்கான நியாயத்தை பெற்றுத் தர சர்வதேசமே முன்வர வேண்டும் " என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் அண்மையில் குறித்த பகுதிக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க் அங்கு சென்று அஞ்சலி செலுத்தியும் மக்களை சந்தித்து நீதியை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.
இதனுடன், திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் செம்மணி மனித புதை குழி தொடர்பில் தெரிவிக்கையில் "ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் ஆணையாளர் வருகையின் போது நீண்ட காலமாக புரையோடி போய்க் கிடக்கின்ற செம்மணி படுகொலை சம்பந்தமாக தமிழ் தலைமைகள் விரிவாக பேசிய போதும் அவர் நாட்டை விட்டு செல்கின்ற போது சொல்லி இருக்கின்ற அறிக்கை அவ்வளவு ஆரோக்கியமானதாக அல்ல.
இஸ்ரேலிய கொடும் கோலர்களால் சிறு குழந்தைகளும், பெண்களும் மருத்துவமனை தாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கின்ற போதும் அது தொடர்பில் எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுக்காத ஒரு ஆணையாளரால் செம்மணி தொடர்பான தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.
ஏற்கனவே நவநீதன் பிள்ளை செம்மணி தொடர்பாகவும் நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாகவும் மற்றும் அதன் உண்மை தன்மை தொடர்பாகவும் மிக விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலியர்களால் காசா மக்கள் கொல்லப்படுவதை இவர்களால் கண்டிக்கவோ அறிக்கை விடவோ முடியாத போது எவ்வாறு செம்மணிக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.
செம்மணி அகழ்வுகள், காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மிகுந்த சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது எங்களை நியாயம் கேட்க விடுங்கள் என்ற புலம்பலாக தமிழர்களின் மனதில் பதியப்பட்டுள்ளதுடன் தமிழ் மக்களிடையே அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துள்ளதுடன் தற்போதைய அநுர குமார அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையிழக்க வைத்துள்ளது.
இந்த விவகாரம், தமிழர் இனத்துக்கெதிரான திட்டமிட்ட தாக்குதலாக பல அமைப்புகளால் கண்டிக்கபட்டது. அரசின் நடவடிக்கைகள் அல்லது நடவடிக்கையின்மை, இதனை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் மற்றும் இனவெறிக்கு நேரடியாக அனுமதி அளிக்கின்ற ஒரு நிலைமை என்பதை வலியுறுத்துகிறது.
இது அரசியல் உரையாடல்களில் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை பரவலாக்கியது.
புதை குழிகளில் மனித எச்சங்களை அகழ்வுகள் வழியாக பெறப்பட்டாலும் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டாலும், தொடர்ச்சியான விசாரணைகள் நடைபெறவில்லை.
குற்றவாளிகள் அடையாளம் காணப்படாமலும், நீதி வழங்கப்படாமலும் இருப்பது இலங்கை சட்டத்தின் மீது கேள்விக்குறியாகவே உள்ளதுடன் நீதி என்பது மட்டுமல்ல அது நிகழ வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு எதிராக அமைந்துள்ளதை அறிய முடிகின்றது.
இது குறித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினரான திருகோணமலையை சேர்ந்த கோகிலா தேவி கருத்து தெரிவிக்கையில் " செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் ஏழாவது நாளில் இரு சிறு பிஞ்சு குழந்தைகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எந்தவொரு நாட்டிலும் மனித உரிமைகள் மீறல் இப்படியில்லாத நிலையில் இங்கு மட்டும் சிறுவர்களின் எச்சங்கள் தான் என்பதற்கு யுனிசெப் பை மற்றும் கை பொம்மை ஆதாரங்களாக உள்ளன எனவே சர்வதேச நீதி மூலமாக இதற்கான நீதியை எம் மக்களுக்கு நிலை நாட்டுங்கள்” என தெரிவித்துள்ளார்.
இதற்கான தீர்வு வேண்டும் நீதி தேவை பற்றி இலங்கை நாடாளுமன்றிலும் வெளியிலும் பேசப்பட்டு வந்தாலும் ஐக்கிய நாடுகள் மற்றும் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள், செம்மணியின் கீழ் புதைக்கப்பட்ட எலும்புக்கூட்டுகளை இனப்படுகொலைக்கு சான்றுகளாக பார்க்கின்றன.
ஜெனீவா மாநாடுகளில் இது மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டாக பயன்படுத்தப்பட்டதுடன் 2025 இல் மீண்டும் அகழ்வுகள் நடைபெற தொடங்கியதும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் அதிகாரி செம்மணியில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இது சர்வதேச கவனத்தை மீண்டும் ஈர்த்தது என்பதை அண்மையில் இடம் பெற்ற அவரது விஜயம் ஒரு செய்தியை சொல்லவருகின்றது.
இந்த சம்பவம், இலங்கையில் சட்ட மருத்துவம், அகழ்வியல், மற்றும் DNA அடையாளம் காணும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய இடத்தை ஏற்படுத்தியுள்ளதுடள் இது நீதிக்கான செயற்கையாக மட்டுமல்லாமல், அறிவியல் ஆய்வுகளுக்கும் வழிகாட்டி ஆனது. செம்மணி மனிதப் புதைகுழி என்பது ஒரு வரலாற்றுச் சிந்தனை அல்ல, அது ஒரு சமூகத்துக்கான உணர்வுடன் தொடர்புபட்டது.
இது சமூக நீதி, இன ஒற்றுமை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற தேவையை வலியுறுத்தியுள்ளதுடன் கடந்த காலத்தின் அவலங்களை மறந்து விடாமல், அதிலிருந்து எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் சமூக விழிப்புணர்வை உருவாக்கும் வழியாக இத்தகைய சம்பவங்களைப் புரிந்து கொள்வது அவசியமாகின்றது.
பல்வேறு சமூக மக்கள் இயக்கங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அணையா விளக்கு போன்ற நிகழ்வுகள் ஊடாக நீதிக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற முக்கியமான மனித உரிமை மீறல் சம்பவங்களில் இச் சம்பவம் ஒன்றாகும். இது 1990 களில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் இராணுவத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இதேபோன்ற புதைகுழிகள் பல இடங்களில் இருக்கக்கூடும் என்று தொடர்ந்து கவலை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளார்கள் ஆனாலும் இருபத்துக்கும் மேற்மற்பட்ட மனித புதை குழிகள் வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இவ்வாறான இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம் எனபதுடன் பல தமிழ் சமூகங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கைகள் தெரிவிப்பது போல, இலங்கையின் உள்ளக அமைப்புகள் உண்மையான நீதியை வழங்காத நிலை ஏற்பட்டுள்ளதால், சர்வதேச நீதிமன்றம் அல்லது விசாரணை அமைப்பே வழியென்று வலியுறுத்தப்படுகின்றது.
ஒட்டு மொத்தமாக செம்மணியில் நீதி கிடைக்காவிட்டால், அந்த அடையாளமே சிதைவடையும் அத்தோடு நியாயம் கிடைக்காவிட்டால் வரலாறு மீண்டும் இருண்ட காலத்தைச் சந்திக்கும்.
இந்தப் புதைகுழியின் உரிய விசாரணை நடக்காமை எதிர்காலத்தில் இதேபோன்று மீண்டும் தவறு நிகழக் கூடும் என்பதை குறிக்கிறது எனவே இது ஒரு புதிய சமூக பாதுகாப்பு நிலைக்கு அடித்தளம் அமைக்க வேண்டும்.
செம்மணி தொடர்பாக, சிலர் அரசியல் நோக்கங்களுக்காக இதை பயன்படுத்தலாம் என விமர்சனம் செய்யலாம் ஆனால் உண்மையில் இது மனிதாபிமானம் சார்ந்தது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நீதியும், அமைதியும் வேண்டியது தவிர வேறு நோக்கம் இல்லை.
இதனால் தமிழர் தாயகங்களில் குறிப்பாக வடகிழக்கு மக்களின் உணர்வுகளை மதித்து ஆளும் அரசாங்கம் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
