3 வருடங்களில் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாறவுள்ள இலங்கை!
இலங்கையின் வடக்கு, கிழக்கில் கண்ணிவெடி அகற்றுவதற்கு இன்னும் 23 சதுர கிலோமீற்றர்களே எஞ்சியுள்ளதாக மனிதாபிமான கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு குறித்தும் இந்த மாநாட்டில் பாராட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு சுவிட்ஸர்லாந்தின் (Switzerland) ஜெனீவாவில் (Geneva) உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் (ICCG) கடந்த ஏப்ரல் 29 முதல் மே 1 வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மாநாட்டுக்கான ஏற்பாடு
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனீவா சர்வதேச மையம் (GICHD) மற்றும் ஐக்கிய நாடுகளின் (United Nations) கண்ணிவெடி நடவடிக்கைக்கான ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
04 பிரதான இடைக்கால கலந்துரையாடல்களை உள்ளடக்கிய இந்த மாநாட்டில் இலங்கையின் தலைமையில் ஒரு கலந்துரையாடல் மாநாடு நடைபெற்றதும் விசேடமாகும்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் (Ministry of Urban Development and Housing) செயலாளரும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் பணிப்பாளருமான டபிள்யூ.எஸ். சத்யானந்த (W.S.Sathyanantha) மற்றும் பிரதிப் பணிப்பாளர் வி. பிரேமச்சந்திரன் (V.Premachandran) ஆகியோர் கலந்துகொண்டனர்.
3000க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள்
மனிதாபிமான கண்ணிவெடி நடவடிக்கைக்கான சர்வதேச மாநாட்டின்படி கண்ணிவெடி அகற்றும் பணியில் ஒவ்வொரு நாடும் அடைந்துள்ள முன்னேற்றம், செயன்முறையை வெற்றிகரமாக நிர்வகிப்பதில் பெற்ற அனுபவம், அறிவு பரிமாற்றம், சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக டபிள்யூ.எஸ்.சத்யானந்த தெரிவித்தார்.
கண்ணிவெடி அகற்றும் பணியில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தற்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஒரு சதுர கிலோ மீற்றர் தூரத்தில் 3000க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அடுத்த 03 வருடங்களில் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், இன்னும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 23 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் மாத்திரமே கண்ணிவெடிகள் அகற்றப்படவிருக்கிறது எனவும் இந்த மாநாட்டில் சத்யானந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கண்ணி வெடி அகற்றல்
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனிவா சர்வதேச மையத்தின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் இப்பணிகளை இலங்கை இராணுவம் Hallo Trust, MAG, Sharp மற்றும் DASH ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
அமெரிக்கா (United States), பிரித்தானியா (United Kingdom), கனடா (Canada), ஜப்பான் (Japan), அவுஸ்திரேலியா (Australia), சுவிற்ஸர்லாந்து (Switzerland) மற்றும் நோர்வே (Norway) போன்ற நாடுகள் இதற்கு நிதியுதவி அளித்து வருகின்றன.
வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றி மக்களை மீள்குடியேற்ற இலங்கை எடுத்துவரும் வேலைத்திட்டம் குறித்து மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு சத்யானந்த தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தை தான் பயன்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |