வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம்
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (14) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான சபை நடவடிக்கைகள் காலை 9.30க்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு, காலை 10.00 முதல் மாலை 06.00 வரை 2027 இரண்டாம் வாசிப்பு விவாதம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வரவு செலவுத் திட்டம் என அழைக்கப்படும் 2027ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை கடந்த வியாழக்கிழமை (12) சமர்ப்பித்திருந்தார்.
மூன்றாவது வரவு செலவுத் திட்டம்
2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 1.753 டிரில்லியன் ரூபாயாக இருக்கும் என அரசாங்கம் கணித்துள்ளதுடன், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4.5 சதவீதத்திற்குச் சமமாகும்.

தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது வரவு செலவுத் திட்டமும், இலங்கை வரலாற்றில் 81ஆவது வரவு செலவுத் திட்டமுமான 2027 வரவு செலவுத் திட்டத்தில், 2026ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான 7.309 டிரில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில், அரசாங்கத்தின் மொத்தச் செலவினம் 7.933 டிரில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2027 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 20ஆம் திகதி வரை தொடரவுள்ளதுடன், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து குழுநிலை விவாதம் (மூன்றாம் வாசிப்பு) நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |