கைது செய்த பின் காவல்துறையினரை தகாத வார்தைகளால் பேசிய கஸ்ஸப தேரர்: வெளியாகிய காணொளி
அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் உண்ணாவிரதம் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் நேற்று கைது செய்யப்பட்தையடுத்து அவர் காவல்துறையினரை அச்சுறுத்தி பேசிய காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
அந்த காணொளியில் அவர் காவல்துறை அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
நேற்று (12.11.2026) கைது செய்யப்பட்ட பின்னர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
விளக்கமறியல்
குறித்த காணொளியில், மருத்துவமனைப் படுக்கையில் இருந்த தேரரைச் சுற்றி மருத்துவப் பணியாளர்களும் காவல்துறை அதிகாரிகளும் காணப்படுகின்றனர்.

இதன்போது, தம்முடன் இருந்த காவல்துறை அதிகாரிகளை பலாங்கொட கஸ்ஸப தேரர் தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதும் பதிவாகியுள்ளது.
சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்ற இடத்தில் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கும், ராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்தே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில், அநுராதபுரம் புனித நகரப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஏழு பேரையும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புனிதப் பகுதியில் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்ததன் மூலம் நீதிமன்றத்தினால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |