காவி உடைக்குள் மறைந்து போதைப்பொருள் வர்த்தகம்: சர்ச்சையை கிளப்பும் அனுராதபுரம் சம்பவம்
காவியுடை அணிந்து கொண்டு சட்டவிரோத வியாபாரங்களில் பலப்பிட்டியபகுதியைச் சேர்ந்த 'வாச' என கூறப்படும் தேரர் ஒருவர் குறித்து பிரித்தானியாவில் இருக்கும் இலங்கை காவல்துறையின் முன்னாள் பொறுப்பதிகாரி அஜித் தர்மபால பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற தேரர்களுக்கு இடையிலான மோதல் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அமைதிகாக்கும் மகாநாயக்க தேரர்கள்
''பலப்பிட்டியபகுதியைச் சேர்ந்த 'வாச' என்ற தேரர் போர்வையில் உள்ள நபர் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

விகாரையில் இருந்துகொண்டே மக்களுக்கு அதிக வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலையும் அவர் செய்து வருகிறார்.
சட்டவிரோத வழிகளில் சம்பாதித்த கறுப்புப் பணத்தைக் கொண்டு, அப்பகுதியில் 50 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை வாங்கிக் குவித்துள்ளார்.
இவர்களை போன்ற தரப்பினரே பௌத்த மதத்தின் புனித தன்மையை இல்லாது செய்கின்றனர்.
கிறிஸ்தவ பாதிரியார்கள் அல்லது இஸ்லாமிய மௌலவிகள் அவ்வாறில்லை. எனினும் காவி உடைக்குள் இவ்வாறான பல குற்றவாளிகள் மறைந்து கிடக்கின்றனர். அதன் வெளிப்பாடே அனுராதப்புரத்தில் இடம்பெற்ற சம்பவம்.
இதற்கமைய அனைத்துப் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் இனியும் அமைதியாக இருக்காமல், உடனடியாக ஒரு தர்ம சங்காயனாவை கூட்டி, ஒழுக்கக்கேடான நபர்களைச் சாசனத்திலிருந்து நீக்கி பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டும்.
குறிப்பிட்ட சில விகாரைகளுடன் தொடர்புடைய சட்டவிரோதச் செயல்கள் மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் குறித்துச் சட்ட அமலாக்கத் துறையினரும் நிதிப் புலனாய்வு அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |