போதைப்பொருளுடன் சிக்கிய படகு : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளைக் கடத்திச் சென்ற நெடுநாள் மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டு காலி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த படகிலிருந்து 50 ஐஸ் போதைப்பொருள் பொதிகளும், 52 ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன், அவை ஆறு சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்ததாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே இந்தப் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள்
கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றிருந்த இந்தப் படகில் போதைப்பொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையையடுத்து, நவம்பர் 11 ஆம் திகதி இது கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, படகிலிருந்த ஐந்து சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் தொகையின் எடை மற்றும் அளவை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளைப் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |