திருநெல்வேலி சைவச் சிறுவர் இல்ல மாணவன் மீது தாக்குதல்: ஆசிரியருக்கு மன்று பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி சைவச் சிறுவர் ஆண்கள் இல்ல மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் மூன்று இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு குறித்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சைவ சிறுவர் இல்ல மாணவர்களுக்கு இரவு நேர கற்பித்தல் நடவடிக்கைக்காக ஆசிரியர் ஒருவர், இல்லத்தின் முகாமைத்துவ சபையின் அனுமதியின்றி வித்திய விருத்திச்சங்கத்தின் கல்வித்திட்டப்பணிப்பாளரின் பரிந்துரையில் இல்லத்திற்கு முறையற்ற விதத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரின் தவறான நடத்தைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முகாமைத்துவ சபையின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் கருத்து முன்வைத்து வந்த போதிலும் அதனை சங்க தலைவர் உள்ளிட்டவர்கள் எவ்வித நடவடிக்கையும்எடுக்காது பொறுமை காத்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த ஆசிரியரினால் மாணவன் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
தனியார் வைத்தியசாலை
ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலையில் அவரை அனுமதிக்காது சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இணுவில் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலையில் மாணவனை அனுமதித்தால் சட்ட நடவடிக்கைளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற காரணத்தால் தனியார் வைத்தியசாலையில் மாணவரை அனுமதித்து சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் காவல்துறையினர், குறித்த ஆசிரியரை நேற்றைய தினம் (12-11-2026) காவல் நிலையத்திற்கு அழைத்து வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
இதையடுத்து, ஆசிரியரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் ஆசிரியரை மூன்று இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |