யாழில் பென்ஸ் காரில் ஆயுதங்களுடன் சிக்கிய நபர்கள்: பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
யாழில் சொகுசு காரில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் பயணித்த இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நீதவான் நீதிமன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சோதனை நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சாவகச்சேரி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த பென்ஸ் ரக சொகுசு காரினை வழிமறித்து சோதனையிட்டனர்.

அதன் போது காரினுள் வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து காரில் இருந்த இருவரையும் கைது செய்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (12-11-2026) இருவரையும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை கார் மற்றும் காரினுள் மீட்கப்பட்ட பொருட்கள் என்பவற்றையும் காவல்துறையினர் சான்று பொருட்களாக மன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவற்றை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை குறித்த சொகுசு கார் இளவாலை பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவருடையது எனவும் அவரால் நாளொன்றுக்கு எட்டாயிரம் ரூபாய் வீதம் சந்தேகநபர்களுக்கு கார், வாடகைக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கார் தொடர்பிலும் காரின் உரிமையாளர் தொடர்பிலும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |