வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ள அரசாங்கம்
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மாதாந்த தனிநபர் வருமான வரி விலக்கு எல்லையை 150,000 ரூபாவிலிருந்து 162,500 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இதன் மூலம் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மேலதிக வரி நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் இன்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வரவு செலவுத் திட்ட உரைக்கு அமைய, வருடாந்த தனிநபர் வருமான வரி விலக்கு கொடுப்பனவை 1.8 மில்லியன் ரூபாவிலிருந்து 1.95 மில்லியன் ரூபாவாக உயர்த்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழிந்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்களுக்கு அமைய, மாதாந்தம் 162,500 ரூபா வரை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் தமது சம்பளத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
அத்துடன், வரி வரம்புகளை விரிவுபடுத்துவதன் மூலமும், ஆரம்ப 6% வரி வரம்பிற்குப் பின்னர் தற்போதுள்ள 18% வரி வீதத்திற்குப் பதிலாக 12% என்ற புதிய வரி வீதத்தை அறிமுகப்படுத்துவதன் மூலமும் படிப்படியான தனிநபர் வருமான வரி கட்டமைப்பை மாற்றியமைக்கவும் வரவு செலவுத் திட்ட உரையில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, முன்மொழியப்பட்டுள்ள புதிய வரி வீதங்கள் 6%, 12%, 18%, 24%, 30% மற்றும் 36% ஆக அமையும்.
மேலும்,உச்சபட்ச தனிநபர் வருமான வரி வீதம் அறவிடப்படும் மாதாந்த வருமான எல்லையை 358,000 ரூபாவிலிருந்து 433,000 ரூபாவாக அதிகரிக்கவும் இந்தத் திருத்தங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட உரைக்கு அமைய, இந்தப் புதிய மாற்றங்களின் மூலம் தனிநபர் வரி செலுத்துவோருக்கு அவர்களின் வரிக்கு உட்பட்ட வருமானத்திற்கு ஏற்ப மாதாந்தம் 750 ரூபா முதல் 15,750 ரூபா வரை மேலதிக வரி நிவாரணம் கிடைக்கும்.
2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வரித் திருத்தங்களுடன் ஒன்றிணைத்துப் பார்க்கும்போது, தனிநபர் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் மொத்த மாதாந்த வரி நிவாரணம் 4,250 ரூபா முதல் 36,250 ரூபா வரை அமையும் என முன்மொழிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |