மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள பிரதி ஆணையாளருக்கு பிணை : நீதிமன்றம் உத்தரவு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள (DMT) நாரஹேன்பிட்டிய கிளையின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க (Thanuja Lakmali Jayatunga) இன்று (04) உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் உரிமங்களைப் பெற வந்தபோது, பொதுமக்களிடமிருந்து சுமார் 4 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
வெளிநாடு செல்ல தடை
இந்த நிலையில், ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா 2 மில்லியன் ரூபா இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கவும், சந்தேக நபர்களுக்கு தலா 25,000 ரூபா ரொக்கப் பிணையை விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்ததுடன் போக்குவரத்து திணைக்களத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலித்த நீதவான், சந்தேக நபர்களை விடுதலை செய்துள்ளதுடன் நவம்பர் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
