காசாவில் தொடரும் இஸ்ரேலின் கொலை வெறி : 03 ஊடகவியலாளர்கள் உட்பட பலர் பலி
காசாவில் நேற்று(21) இஸ்ரேல் நடத்திய 3 வெவ்வேறு தாக்குதல்களில் 03 ஊடகவியலாளர்கள், 2 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
சாஹ்ராவில் எகிப்து அரசு தலைமையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
மூன்று ஊடகவியலாளர்கள் படுகொலை
இந்த தாக்குதலில் அனஸ் குனைம், அப்துல் ரவூப், ஷாத் முகமது கெஷ்டா ஆகிய மூன்று புகைப்படக் கலைஞர்கள் கொல்லப்பட்டனர்.

பத்திரிகையாளர்கள் சென்ற வாகனம் ட்ரோன்களைப் பயன்படுத்தி இராணுவ இரகசியங்களைச் சேகரிக்க முயன்றதாகவும், அதனாலேயே வான்படை அந்த வாகனத்தைக் குறிவைத்துத் தாக்கியதாகவும் இஸரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
பசியுடன் விறகுகள் சேகரிக்கச் சென்ற 13 வயது சிறுவன்
அதேபோல் முவாஸி பகுதியில் பெண் ஒருவர் இஸ்ரேல் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், புரைஜ் முகாமில் நடைபெற்ற ஷெல் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், மேற்கு காசா பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவனை இஸ்ரேல் இராணுவம் சுட்டுக்கொன்றதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காலையில் அவன் பசியுடன் விறகுகள் சேகரிக்கச் சென்றதாகவும், விரைவில் திரும்பி வருகிறேன் எனக் கூறியதாகவும் கொல்லப்பட்ட 13 வயது சிறுவனின் தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
ஒக்டோபர் 10 போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |