வெளிநாடொன்றில் தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை: விதிக்கப்பட்ட உத்தரவு
இந்தோனேஷியாவில் (indonesia) மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கும்படி, அங்கு உள்ள இந்திய துாதரகத்திற்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை அவர்களது குடும்பத்தினரிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ராஜு முத்துக்குமரன், 38, செல்வதுரை தினகரன், 33 மற்றும் கோவிந்தசாமி விமல்காந்தன், 37 ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் இந்தோனேஷியாவில் தனியார் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.
போதைப்பொருளை கடத்த முயற்சித்ததாக கைது
கடந்த 2024 ஜூலையில், இவர்கள் மூன்று பேரும், 104 கிலோ 'மெத் ஆம் பெட்டமைன்' எனும் போதைப்பொருளை கடத்த முயற்சித்ததாக, இந்தோனேஷிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு எதிரான வழக்கு இந்தோனேஷியாவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் நடந்து வந்தது. அந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 25ல் மூன்று பேருக்கும் மரண தண்டனை விதித்து, இந்தோனேஷிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த செய்தி அறிந்து மூன்று பேரின் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
மரண தண்டனையில் இருந்து தங்கள் கணவரை காப்பாற்றக் கோரி, அவர்களது மனைவியர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி சச்சின் தத்தா அமர்வு முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த அவர், இந்தோனேஷிய சிறையில் உள்ள மூன்று பேருடன், அவர்களது மனைவியர் தொடர்புகொண்டு பேச வசதி ஏற்படுத்த வேண்டும், மரண தண்டனை பெற்றவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும், இந்த விவகாரம் தொடர்பாக, இந்தோனேஷிய அரசுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் பேச்சு நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
