யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நெஞ்சை நெகிழ வைத்த தருணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்பவருக்கு ஏகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது.
பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராக்கப்பட்ட பின்னர் அவர் உயிருடன் இல்லாததால், இன்று இடம்பெற்ற 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் ஏகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது.


இந்த சம்பவம் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரின் மனதையும் உருகச் செய்துள்ள நிலையில், குறித்த பட்டத்தை தாய் கண்ணீருடன் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதேபோல, கடந்த ஆண்டு கலைப்பீடத்தில் பட்டம் பெற்ற டில்காந்தி நவரட்னம் என்பரது பட்டத்தை அவரது தாயாரிடம் இவ்வாறு ஏகாந்த நிலையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொதுப்பட்டமளிப்பு விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் வாழ் நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், ஆரம்பமாகியுள்ளது.
பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமாகிய பொதுப்பட்டமளிப்பு விழா நாளையுடன் நிறைவடையவுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 278 பேர் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெறவுள்ளனர்.
அத்துடன், சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 32 தங்கப்பதக்கங்களும், 10 புலமைப்பரிசில்களும், 25 பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

இன்றைய அமர்வுகளில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், விஞ்ஞான பீடம், கலைப்பீடம் மற்றும் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில் நுட்பக் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகைச் சேர்ந்த சித்தவைத்திய சத்திர சிகிச்சைமாணி பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.