ஐந்து வயது சிறுவன் மர்ம மரணம் -51 வயதானவர் சிக்கினார்
முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் 05 வயதுடைய சிறுவன் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 51 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட கட்டுமானப் பகுதிக்கு அருகாமையில் இருந்த புல் வெட்டும் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை மாலை ஹல்பராவ பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்து உடைந்த கண்ணாடி துண்டுகளால் ஏற்பட்ட காயங்களுடன் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.
காவல்துறைக்கு கிடைத்த தகவல்
காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாக முல்லேரிய காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து முல்லேரிய காவல்துறையினர் சடலத்தை கண்டெடுத்த நிலையில், உடைந்த போத்தலினால் ஏற்பட்ட கண்ணாடித் துண்டுகளினால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக மரணம் சம்பவித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர் ஹல்பராவ, மாலம்பே பகுதியைச் சேர்ந்த 05 வயதுடையவர். பெற்றோர் பிரிந்து தாய் வெளிநாட்டில் தொழில் செய்து வருவதால், குழந்தை தாத்தா பாட்டியின் பாதுகாப்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் தேசிய தொற்று நோய் நிறுவனத்தில்
நீதவானின் விசாரணை மற்றும் மருத்துவ அதிகாரியின் பரிசோதனை அந்த இடத்தில் முடிந்தது, குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் (IDH) வைக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் வயிற்றில் கூர்மையான பொருள் குத்தியதால் இரத்தம் கசிந்ததன் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
