இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - தக்க சமயத்தில் உதவிய நாடு
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தோனேசிய அரசாங்கம் முதன்முறையாக 570 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களையும் சத்திரசிகிச்சை உபகரணங்களையும் இன்று மாலை (28).கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 570 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உதவித் தொகை 3100 கிலோகிராம் எடையுடையது. இந்த மருத்துவ உதவித் தொகையில், குறிப்பாக புற்றுநோயாளிகளுக்கு தேவையான மருந்துகளின் கையிருப்பு அடங்கியுள்ளது.
இலங்கையின் கோரிக்கைக்கு இரண்டு வாரங்களுக்குள் இந்தோனேசிய அரசாங்கம் பதிலளித்தமைக்காக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, விமான நிலையத்தில் அரசாங்கத்தினதும் மக்களதும் சார்பாக தனது நன்றியைத் தெரிவித்தார்.
இன்று (28) மாலை 05.34 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-364 இல் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மருந்துப் பொருட்கள் மற்றும் சத்திரசிகிச்சைக் கருவிகள் வந்தடைந்தது.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் டேவி டோபின் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி டொக்டர் அலகா சிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
