ஒன்றிணைந்த தமிழ் பேசும் கட்சிகள் - இன்று முக்கிய சந்திப்பு
தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணக்கூடிய பொதுவான உபாயங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு ஒப்பந்தத்தை இன்று (13) அறிவிக்கவுள்ளன.
இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகள் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையான வாக்கு வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இன்று சந்தித்து, முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள விருந்தகமொன்றில் இன்று பிற்பகல் இந்த முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கூட்டு அரசியல் முயற்சி
அரசாங்கத்தின் குறைகளையும் நிறைகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவும் கூட்டாகவும் முன்வைப்பதற்கான பொதுவான மேடையொன்றை உருவாக்குவதே இந்தச் சந்திப்பின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டின் பல முக்கிய விவகாரங்களில் அலட்சியப் போக்குடன் செயற்படுவதாகச் சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அரசாங்கத்திற்கு முறையான அழுத்தங்களை வழங்க இந்த கூட்டு அரசியல் முயற்சி மிகவும் அவசியமானது என்றார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணக்கூடிய பொதுவான உபாயங்களை ஒன்றிணைந்து கண்டறிவதே இந்த சந்திப்பின் அடிப்படை என வலியுறுத்தினார்.
தமிழ் பேசும் கட்சிகளின் இந்த ஒற்றுமை முயற்சி காலத்தின் கட்டாயத் தேவை என்று சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், இத்தகைய அரசியல் முனைப்பானது சமூகங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
முன்னதாக பல கட்டங்களால் தமிழ் பேசும் கட்சிகளிடையே, பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்த நிலையில் இன்று முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |