ஐ.எம்.எப் விதித்த 62 நிபந்தனைகள் ; 25 ஐ மாத்திரம் நிறைவேற்றியுள்ள சிறிலங்கா அரசு
சர்வதேச நாணய நிதியத்தின் 25 நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் இதுவரை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெரித்தே றிசேச் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன் நிவாரணம் தொடர்பான முதலாவது மீளாய்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளது.
நிபந்தனைகள்
இந்த நிலையில், நாணய நிதியத்தின் இரண்டாவது கட்ட உதவியை பெற்றுக் கொள்வதற்கு முன்னர் அதன் 62 நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்து.
எனினும், குறித்த 62 நிபந்தனைகளுள் இதுவரை 25 நிபந்தனைகள் மாத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெரித்தே றிசேச் ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, வங்கி வட்டி வீதங்களை அதிகரித்தல், புதிய வரிகளை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட 25 நிபந்தனைகள் சிறிலங்கா அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிதி வெளிப்படைத்தன்மைக்கான இணையவழித் தளத்தை கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அமைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும், அதனை நிறைவேற்ற தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கட்ட உதவியை இலங்கை பெற்றுக் கொள்வதற்கு முன்னதாக பூர்த்தி செய்யப்பட வேண்டிய 37 நிபந்தனைகள் நிலுவையில் இருப்பதாக வெரித்தே றிசேச் ஆய்வு நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
