காவல்துறை காவலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் - 7 காவல்துறையினருக்கு விளக்கமறியல்..!
காவல்துறையினரின் காவலில் இருந்த போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 காவல்துறை உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
காவல்துறை காவலில் வைத்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய, சம்பவத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் 7 அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அவா்களில் உதவி காவல்துறை பாிசோதகா் ஒருவரும், காவல்துறை சார்ஜென்ட் ஒருவரும், காவல்துறை கான்ஸ்டபிள்கள் 5 பேரும் அடங்கியுள்ளனா்.
நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஹிக்கடுவையைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் காவல்துறை காவலில் வைக்கப்பட்ட பின்னர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
