செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 72 சான்றுப் பொருட்கள் மனித எலும்பு கூடுகளோடு மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
குறித்த 72 சான்றுப் பொருட்களும் எடுக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு பாதுகாப்பாக நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நேற்றைய அகழ்வுப் பணி நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இராணுவத்தினரிடம் விசாரணை
அவர் மேலும் தெரிவிக்கையில், மூன்று மனித மண்டையோட்டு தொகுதிகளோடு காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் குவியலாக போடப்பட்டிருந்த நிலையில் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 209 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 191 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அகழ்வுப்பணிகள் நிறைவடைந்த பின்னர் தான் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆய்வு செய்கின்ற வைத்தியர்கள் இந்த அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் இரண்டையும் சமாந்தரமாக செய்ய முடியாதுள்ளது.
இந்த அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்த நீதிமன்றங்களில் வழக்குகள் அழைக்கப்படும் போது தான் இது குறித்து இராணுவத்தினரிடம் விசாரணை மேற்கொள்வதற்கான சமர்ப்பணங்களை செய்ய முடியும்.
செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் இதுவரை 39 தினங்கள் அகழ்வுப்பணி நடைபெற்றுள்ள நிலையில் 40 வது நாளாக இன்றும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
