செம்மணி மனித புதைகுழியை பார்வையிடுவாரா ஜனாதிபதி...! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிடுவாரா என்று எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் வலுத்துள்ளது.
பல்வேறு அபிவிருத்தி பணிகளை தொடக்கி வைப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார இன்றைய தினம் (1.09.2025) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
தொடர்ச்சியாக குடும்பம் குடும்பமாக எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டு வரும் மக்களுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு மற்றும் புலம் பெயர் நாடுகளில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் ஜனாதிபதி செம்மணி புதைகுழி பகுதிக்கு விஜயம் செய்வது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள்
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணியில் புதிதாக பத்து எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரையில் 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை தோண்டத் தோண்ட தினமும் விதவிதமான கொடூரங்கள் அங்கே அரங்கேறி காட்சி அளிக்கின்றன. யுத்தத்தில் ஈடுபடாத தரப்பினரும் இங்கே படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள் என்பது பல்வேறு வகையில் நிரூபணமாகிறது.
அதிலும் மழலைகளும், சிறுவர்களும் உள்ளடங்குகின்றார்கள் என்பது மனித குலம் மன்னிக்க முடியாத ஆகப்பெரிய கொடூரம்.
இதுவரையில் அறியப்படுத்தப்படவில்லை
இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது அவர் செம்மணிக்கு வருகை தருவாரா? என்பது குறித்து நீதிமன்றுக்கு இதுவரையில் அறியப்படுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாண விஜயத்தின் போது செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது வரை வெளியான ஜனாதிபதியின் யாழ் விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரலில் செம்மணி விஜயம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
