இன்று சி.ஐ.டியில் முன்னிலையாக வேண்டாம் : சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவிப்பு
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (01) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அந்த திணைக்களம் (CID) அறிவித்துள்ளது.
இன்று அவர் முன்னிலையாக வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் தொடர்பான விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிக்க இன்று காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இதற்கு முன்னர் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு (Criminal Investigation Department) அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி அவர் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதியாக இருந்த போது தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்குச் சென்றதற்காக அரசாங்க நிதியை செலவழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதல்
இந்தநிலையில் அவரின் பயணத்துக்கான நிதியை ஜனாதிபதி செயலகமே ஒதுக்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சமன் ஏக்கநாயக்கவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பில் கோட்டாபயவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் அழைக்கப்பட்ட திகதி குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
