அடுத்த ஆண்டு 5 பில்லியன் டொலர் வரையிலான கடனை பெற எதிர்பார்ப்பு
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தவிர, பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஆண்டு 5 பில்லியன் டொலர் வரையிலான கடனை இலங்கை எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அரசாங்க சொத்துக்களை மறுசீரமைப்பதன் மூலம் அரசாங்கம் 3 பில்லியன் டொலர் வரை திரட்ட முடியும் என செவ்வி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
மோசமான பொருளாதார நெருக்கடி
அரசாங்கம், 40.6 பில்லியன் டொலர் வெளிக் கடனில் சிக்கித் தவிக்கும் நிலையில், மேலதிகமான நிதியை பெறுவது முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த நிலையில் சில அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் அதிபர் ஆர்வமாக உள்ளதாக அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் மூலம் 2 முதல் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடிந்தால், இலங்கையின் திறைசேரி மற்றும் இருப்புக்கள் பலப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அதன் மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கை, கடந்த செப்டம்பரில் 2.9 பில்லியன் டொலர் கடனுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட ஒப்பந்த இணக்கப்பாட்டை எட்டியிருந்தது.
இந்தக் கடனுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை டிசம்பரில் பெறுவதற்கு இலங்கை எதிர்பார்த்த போதிலும் தற்போது அது ஜனவரி மாதம் வரை தாமதப்படுத்தப்பட்டு்ளளதாக அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.
மிகப்பெரிய இருதரப்பு கடனாளியான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கடன் மறுசீரமைப்புக்கான உறுதிமொழிக்காக இலங்கை அரசாங்கம் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இரண்டு நாடுகளும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், ஆவணங்கள் மற்றும் தரவுகளை இலங்கை அவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் அலி சப்ரி கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கும், பலதரப்பு பங்காளிகளுக்கும் மற்றும் இருதரப்பு நண்பர்களுக்கும் குறுகிய காலமே உள்ளதாகவும் இலங்கையர்களின் நலனுக்காகவும், உலகப் பொருளாதாரத்தின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் இது அவசரமானது என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளதாகவும் அலி சப்ரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக, எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய இறக்குமதிகள் வழமையான நிலைமைக்கு திரும்பியுள்ளதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது எனவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 70 வீதத்திற்கும் மேல் இருந்த பணவீக்கம் நவம்பர் இறுதியில் 61 வீதமாக ஆக குறைந்துள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா
